2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வட மாகாண திணைக்களங்களுக்கான சாரதி நியமனத்தில் முறைகேடு: சிவமோகன்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'வட மாகாணசபையின் நிர்வாகத்தின் கீழுள்ள திணைக்களங்களில் வெற்றிடமாகவுள்ள சாரதிகளை நியமிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் முறைகேடுகள் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் வடமாகாண முதலமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வட மாகாணசபை நிர்வாகத்தின் கீழுள்ள திணைக்களங்களில் ஏற்பட்டுள்ள சாரதி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அவசர அவசரமாக சாரதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு போட்டிப்பரீட்சை ஒன்றும் நடத்தப்பட்டது.

இப் போட்டிப் பரீட்சை மூலம்  சாரதிகளை   தேர்தெடுப்பதில் பல பிரச்சினைகள் தோன்றியதன் காரணமாக மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக, நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்சேர்ப்பு செய்ய முடியாத நிலையில் கௌரவ ஆளுனரின் கீழ் இயங்கிய வடமாகாண நிர்வாகம் இருந்ததாக நான் அறிகிறேன்.

தற்போது போட்டிப் பரீட்சைக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதற்கான நேர்முகப் பரீட்சையை இம்மாதம் 18ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பிரதிப் பிரதம செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நியமனத்தையும் வழங்குவதற்கும் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

சாரதிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு வடமாகாண பிரதி பிரதம செயலாளர் நடவடிக்கை எடுப்பதற்கு முன் முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் காரணமாக பலர் அச்சம் கொண்டு சாரதிகளாக பணியாற்ற முன்வராத போதும் அச்சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் வாகனங்களை செலுத்துவதற்கான சகல தகமைகளுடனும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் சுகாதார திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற முன்வந்தார்கள் என்பதை நான் முல்லைத்தீவு திணைக்களத்தில் பணியாற்றியவன் என்ற வகையில் நன்கு அறிவேன்.

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்ற காலம் தொடக்கம் இன்று வரை நிரந்தர நியமனமோ ஊதிய அதிகரிப்போ இன்றி பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பற்றி எமது வடமாகாணசபை நிர்வாகம் எந்தவிதமான அக்கறையும் கொள்ளாமல் வெளியில் இருந்து சாரதிகளை சேர்த்துக் கொள்வதிலேயே அரசியல் அழுத்தம் காரணமாக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

தற்போதைய போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் 170 புள்ளிகளுக்கு மேல்  பெற்றவர்கள் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவிருப்பதாகவும், அவர்களுக்கே நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

போட்டிப் பரீட்சையில் 170 புள்ளிகளுக்கு மேல் எடுத்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் போது ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுக காலமாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் சேவை முடிவுறுத்தப்பட வேண்டிய ஒரு பரிதாபகரமான நிலை ஏற்படும். என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

ஆகவே பின்வரும் விடயங்களை தாங்கள் மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையிலும் மாகாணத்தின் நிதி அமைச்சர் என்ற வகையிலும் மாகாண பொது நிர்வாகம் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற வகையிலும் தங்களுக்கு முன்வைக்கிறேன்.

பிரதிப் பிரதம செயலாளரால் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நேர்முகப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தல், அமைய அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் நீண்டகாலமாக சாரதிகளான சகல தகமைகளுடனும் பணியாற்றும் சகல சாரதிகளின் பிரச்சனைகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கி உறுதியான தீர்வைக் காணுதல், சாரதிகள் பற்றாக்குறை காரணமாக சிற்றூழியர் தரத்தில் இருந்து கொண்டு தற்காலிக சாரதிகளாக பணியாற்றுபவர்களை இனங்கண்டு நிரந்தர சாரதிகளாக நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல், மேற்படி சேவையாற்றுபவர்களின் நிரந்தர நியமனம் இறுதியாக்கப்பட்ட பின் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை நியமித்தல்.

எமது திணைக்களத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நீண்டகாலமாக உழைத்து வரும் அமைய, தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகளின் நலன்கள் தங்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கிலேயே மேற்படி யோசனைகளை முன்வைத்துள்ளேன்' எனவும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .