2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மது விற்பனை நிலையத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவும்: செல்வம் எம்.பி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை அகற்ற உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'பெரிய கடை கிராம மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இரகசியமான முறையில் மது விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தற்போது தான் அக்கிராம மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே மன்னார் சௌத்பார் பகுதியில் அமைந்திருந்த 2 மது விற்பனை நிலையங்களும் அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பால் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரகசியமான முறையில் பெரிய கடைப்பகுதியில் மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு வந்துள்ளது.

அப்பகுதியில் அதிகமான பாடசாலை மாணவர்கள், யுவதிகள் உள்ள நிலையில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் குறித்த மது விற்பனை நிலையம் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் அப்பகுதியில் பல்வேறு கலாசார சீர்கேடுகள் இடம்பெறும் என அப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் அஞ்சுகின்றனர். எனவே குறித்த இடத்தில் மது விற்பனை நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் உடனடியாக அதனை நிறுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .