2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

உடையார்கட்டு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பிரதேச வைத்தியசாலைக்கென பத்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் சேதமடைந்த நிலையில் உள்ள பழைய கிராமிய வைத்தியசாலைக் கட்டிடத்தில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி, நிரந்தர வைத்தியரும் இல்லாமல் உள்ளமையினால் அப்பகுதி  மக்களும், நோயாளர்களும் பல்வேறு சிரமத்தை எதிர்நோக்குவதாக அம்மக்கள் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு உடையார்கட்டு, மூங்கிலாறு ஆகிய பிரதேசத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வைத்தியசாலைக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களையும், பிரதிநிதிகளையும் சந்தித்த போதே அவர்கள் அந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக அந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவிக்கையில்,
'நாளாந்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே வைத்திய அதிகாரி கடமையில் இருப்பதாகவும், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் 13 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள புதுக்குடியிறுப்பு வைத்தியசாலைக்கோ அல்லது கிளிநொச்சி மாவட்ட தர்மபுரம் வைத்தியசாலைக்கோ செல்ல வேண்டியுள்ளது.

விஸ்வமடு, உடையார்கட்டு, ரெட்பானா, சுதந்திரபுரம் போன்ற சனத்தொகை கூடிய கிராமங்களுக்கென இருக்கும் ஒரே ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கும் இவ்வைத்தியசாலையின் கூறை ஓடுகள் உடைந்த நிலையில் காணப்படுவதினால் மழை காலங்களில் மழை நீர் உட்செல்லும் நிலையும் காணப்படுகின்றது.

இதனால் வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட புதிய காணியில் நிரந்தர கட்டிடத்தை கட்டுவதற்கும் நிரந்தர வைத்தியரை நியமிப்பதற்கும் ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்து குறைகளை கேட்டறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திடம் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வீ.கனகசுந்தர சுவாமி ஆகியோரிடம் கிராம மக்களும் கிராம பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .