2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

எனது மகன் இருக்கின்றானா இல்லையா?: பதில் சொல்லுங்கள்

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

'பல்கலைக்கழகத்தில் படிச்சுக்கொண்டிருந்த எனது மகனை 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிடிச்சுக்கொண்டு போனார்கள். இன்று வரைக்கும் எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. என்னுடைய மகன் இருக்கிறானா அல்லது இல்லையா இரண்டில் ஒரு முடிவைச் சொல்லுங்கள்' என முல்லைத்தீவு முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வுகள், ஞாயிற்றுக்கிழமை (02), முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றன.
இதன்போது, ஆணைக்குழு முன் முறைப்பாடுகளை பதிவு செய்யும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னுடைய மகள் பாமதேவனை கடந்த 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு போகும் போது, மகனுக்கு வயது 27ஆகும். மகனை எங்கு கொண்டு போனார்கள் என்ற விபரம் தெரியாது. சில நாட்களுக்குப் பின்னர் கிளிநொச்சி வைத்தியாசலையில் மகன் இருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கு சென்று பார்த்த போது உண்மையில் காயப்பட்ட நிலையில் மகன் இருப்பதை கண்டேன். பின்னர் அவனுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் கிளிநொச்சி வைத்தியாசலையில் சென்று பார்த்த போது மகனை காணவில்லை.

அதுபற்றி வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களிடம் கேட்டதற்கு, மூங்கிலாறு இயக்கத்தின் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என்றனர். அங்கு போய் பார்த்தபோதும் அங்கு மகன் இருக்கவில்லை.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் மகன் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அரச சார்பற்ற அமைப்புக்கள், அரசு உள்ளிட்டவர்களிடம் மகனை தேடிக் கொடுக்குமாறு மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. எமக்கு எதுவும் வேண்டாம். எமது பிள்ளையை மட்டும் கொடுங்கள் என கண்ணீரூடன் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .