2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சேந்தான்குளத்தில் மீனவர்கள் தொழில் செய்ய தடை: இன்பநாயகம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வலி. வடக்கு சேந்தான்குளத்தில் இலங்கை கடற்படையினர், மீனவர்களினுடைய நாளாந்த தொழிலை செய்வதற்கு தடை விதிக்கின்றனர் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடமாகாண மீனவர்களுடைய பிரச்சினையானது தொடர்ந்தவண்ணம் உள்ளது. யாழ். மாவட்டத்தில் குறிப்பாக காரைநகர், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இந்திய ரோலர் படகுகள் வந்துசெல்கின்ற நிலையானது தொடர்ந்து காணப்படுகின்றது. இதனால், இப்பகுதி மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள்.

இது தவிர, வலி.வடக்கு சேந்தான்குளம் பகுதியில் இலங்கை கடற்படையினர், மீனவர்களினுடைய நாளாந்த தொழிலைச் செய்ய விடாது கட்டுப்படுத்தி வருகின்றனர்.  சேந்தான்குளத்தில்; வறிய மீனவர்களினுடைய வலைகளை அறுத்து தொழில்களை செய்யவிடாது அச்சுறுத்தி அனுப்பியுள்ளனர். இது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இடம்பெற்றது.

இது சம்மந்தமாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பாக தெரியப்படுத்தினோம். இதன் அடிப்படையில் கடற்படையினருடன் பேசி தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டபோதும் கூட, மீண்டும் அவர்களை  அச்சுறுத்தி தொழில் செய்ய விடாது தடுத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய மீனவர்களின் ரோலர் பிரச்சினையை காரணம் காட்டி வடமராட்சி பகுதியின் இன்னொரு சாரார், தாமும் அவ்வாறு தொழில் செய்யப் போவதாக கூறி வருகின்றனர். இந்திய ரோலர் பிரச்சினை என்பது இந்திய, இலங்கை அரசுகளின் ஓர் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த வகையில், இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. மீனவர்களுடைய பிரச்சினையை இந்தந்த ஆளும் தரப்புக்கள் தமது சுயநலத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

இந்த இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்திய மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி இப்பிரச்சினையை தீர்க்காமல் இருக்கப்பார்கிறார்கள். ஆகவே, மீனவர் சமூகம் தேர்தல் காலத்தில் அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை எந்தளவிற்கு நம்பிக்கையுடன் பார்க்க முடியும்? இந்த மீனவர்கள் தங்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒற்றுமையாக செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .