2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீதவானின் காரை படம் பிடித்த யுவதி கைதாகி விடுதலை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த யுவதியொருவர், நீதவானின்  உத்தியோகபூர்வ காரை தனது அலைபேசியில் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மன்னார், மடு பகுதியில் வசிக்கும் குறித்த யுவதிக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் பெண் ஒருவரால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்விரு வழக்கு  தவணைகளுக்கும் அப்பெண் ஒழுங்காக சமூகமளித்திருக்கவில்லை. இதனால், இவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நேற்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றில் குறித்த பெண் முன்னிலையானார். இதன்போது இனிவரும் காலங்களில் வழக்குகளுக்கு ஒழுங்காக சமூகமளிக்க வேண்டும் எனவும் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் நீதிபதி எச்சரித்து விடுவித்தார்.

இந்த சமயத்தில் மேற்படி யுவதி மன்னார் நீதிமன்ற வளாகத்தினுள் நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் அந்த காரின் இலக்கத் தகட்டினையும் தனது அலைபேசியில் படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கு கடமையில் இருந்த பொலிஸாரால் அப்பெண்ணை கைது செய்யப்பட்டார்.

பின்னர், குறித்த யுவதி இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது தான் ஒரு ஊடகவியலாளர் என தெரிவித்த அப்பெண், பின்னர் தான் ஒரு பெரும்பான்மையின பத்திரிகைத் துறை மாணவி என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த யுவதியின் செயற்பாடுகளைக் கண்டித்த நீதவான், இருபதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் இருபதாயிரம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்ததுடன், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மடு பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .