2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரிஷாத்தின் பெயரில் காணிக்கொள்ளை: ஆனந்தன் எம்.பி

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பெயரை பயன்படுத்தி காணி கொள்ளை இடம்பெறுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நேற்று (14) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில், அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் பெயரை பயன்படுத்தி மன்சூர் என்பவர், குணரத்தினம் தங்கராசா என்பவருக்கு சொந்தமான பாவற்குளம் முதலாம் யுனிட்டில் உள்ள ஒரு ஏக்கர் காணிக்குள் அத்துமீறிப்புகுந்து, அந்த காணிக்குள் கடந்த 11.11.2014 அன்று கிணறு வெட்டியுள்ளதாகவும் காணிக்கான வேலி அடைக்கும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் காணி உரிமையாளர் குணரத்தினம் தங்கராசா என்னிடம் முறையிட்டுள்ளார். 

1969இல் காணி துப்புரவு செய்து, ஆறு தமிழ் குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த பரமநாதன் என்பவரை ஊர்காவற்றுறை படையினர் வெட்டிக்கொன்றதன் காரணமாக, ஏற்பட்ட அச்ச சூழல்நிலைகளால், 1990ஆம் ஆண்டு கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு அகதிகளாக சென்றும் இடம்பெயர்ந்து இலங்கையின் ஏனைய பகுதிகளில் உறவினர்கள் நண்பர்களின் வீட்டிலும் வசித்து வந்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகளுக்கு பின்னரான அரச காணிகள் தொடர்புடைய பிரச்சினைக்கு தீர்வு காணுகின்ற துரித வேலைத்திட்டத்தின் கீழ், செட்டிக்குளம் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய 10.05.2013 திகதியிடப்பட்ட கடிதத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம், இந்தியாவிலிருந்து நாட்டுக்குத்திரும்பி குணரத்தினம் தங்கராசா, காணியை துப்புரவு செய்து மீளக்குடியேறும் நேரத்தில், அமைச்சர் ரிஷாத்தின் பெயரை பயன்படுத்தி மன்சூர் என்பவர் மேற்படி காணியை ஆக்கிரமித்துள்ளார். 

இத்தகைய சம்பவங்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே விரும்பத்தகாத அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் அபாயம் தோன்றியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத்துடன் தொடர்பு கொண்டபோதும் பேச முடியவில்லை. அமைச்சர் ரிஷாத் தலையிட்டு அத்துமீறி காணியை பிடித்துள்ள மன்சூரை வெளியேற்றி காணி உரிமையாளருக்கு காணியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செட்டிக்குளம் பிரதேச செயலாளரின் கவனத்துக்கும் முறைப்பாடு தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். 

இதேவேளை, பாவற்குளம் முதலாம் யுனிட்டில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 125 ஏக்கர் காணியை 35 சிங்கள மக்களுக்கு வவுனியா அரச அதிபர் வழங்கியுள்ளார்.

இக்காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் இன்னும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பாத நிலையில் அவர்களது காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான காணிக்கொள்ளைகளை உடன் தடுத்து நிறுத்த இந்திய அரசும் அகதிகளுக்கான ஐ.நாவின் அமைப்பும் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசும் அரசின் அமைச்சர்களும் தமது சுயலாப நோக்கத்துக்காக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .