2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'வடபகுதி இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வடபகுதியில் உள்ள இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு தெரிவித்துள்ளது.
வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் செவ்வாய்க்;கிழமை (02) இடம்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் 'சுதந்திர பயணம்' என்னும் தலைப்பிலான ஊடக மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளது.

இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

'கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து, இன்று 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடபகுதியில் உள்ள இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை. அரசியல், பொருளாதார ரீதியாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், வடபகுதி இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்து, அவற்றுக்கான தீர்வினை பெறும் முகமாக அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு கடந்த ஒரு வருடமாக செயற்பட்டு வருகின்றது. இந்த  அமைப்பு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி யாழில் மாபெரும் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளது.

வடபகுதியில் எமது வலையமைப்பின் கீழ் உள்ள 1000 இற்கும் அதிகமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி இம்மாநாட்டினை நடத்தவுள்ளோம். இம்மாநாட்டில் இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு குறிப்பாக அரச வேலைவாய்ப்புக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாதவாறு அவற்றில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர். தொழில் நிலங்கள், தோட்ட நிலங்கள் என அனைத்தும் சுவீகரிகப்பட்டு வருகின்றது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் என கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்கள், யுவதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் சுதந்திரமாக செயற்படமுடியவில்லை. அவர்கள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூன்று இனங்கள் வாழுகின்றபோதும் எமது கலாசார பண்பாடுகளையும் அடையாளங்களையும் எம்மால் பேண முடியாது உள்ளது.
இன்று 30 வருடகால யுத்தம் முடிந்து 5 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை. அதற்கு பல காரணங்களை சொல்கிறார்கள். ஆனால்,  அவர்கள் சொல்லும் காரணங்கள் தெற்கில் இடம்பெறவில்லையா? அங்கேயும் களவு, துப்பாக்ச்சூடு, போதைவஸ்து பாவனை என பலவும் நடக்கின்றன. அங்கு இப்படி சோதனைச் சாவடிகள் இல்லை. இங்கு மட்டும் ஏன்? இது வடக்கையும் தெற்கையும் பிரித்து பிரிவினையை ஏற்படுத்துகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் இளைஞர்கள் ஆகிய நாம் ஒன்றுபட முடியாது இருக்கிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஆகிய நாம் ஒன்றுமையாக செயற்படவிடாது தமிழ், சிங்களம் என்ற பிரிவினையை இந்த ஓமந்தை சோதனைச் சாவடி ஏற்படுத்துகிறது. இது நீக்கப்பட வேண்டும். இவற்றுக்காக நாம் தொடர்ந்து இளைஞர்களை திரட்டி போராடுவோம்.

இவ்வாறு இளைஞர்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றும் முகமாக டிசம்பர் 10ஆம் திகதி யாழ் நகரில் :சுதந்திர பயணம்' என்னும் மாபெரும் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளோம். அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் இரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் வழங்கவுள்ளோம்' எனவும் தெரிவித்தனர்.

இம்மாநட்டில் அவ் வலையமைப்பின்  இணைப்பாளர்களான சி.பிரதீப், ரா.புஸ்பகாந்தன், விஜிதரன், ரவீந்திர மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .