2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாந்தை கிழக்கு பிரதான வீதி புனரமைக்கப்படவில்லை

Thipaan   / 2015 ஜூன் 29 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 2,800 குடும்பங்கள் தினமும் பயன்படுத்தும் பிரதான வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதால் தாம் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மூன்று முறிப்பு, பாண்டியன்குளம், வீரப்பிராயர் குளம், பனங்காமம், கொம்புவைத்தகுளம், நட்டாங்கண்டல், சிறாட்டிகுளம், விநாயகபுரம், கொல்லவிளாங்குளம், பாலிநகர், சிவபுரம், அம்பாள்புரம் உள்ளிட்ட மிகவும் பழமை வாய்ந்த விவசாயக் கிராமங்களையும் அதனை அண்டிய சிறிய கிராமங்களிலும் 2,800 குடும்பங்களைச் சேர்ந்த 9,975 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தக் கிராம மக்கள் மருத்துவ வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் போன்ற எந்த வசதிகளைப் பெற்றுக்கொள்வதாக இருந்தாலும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.

குறிப்பாக சிறாட்டிகுளம், மூன்றுமுறிப்பு, கொம்;புவைத்தகுளம், பாலைப்பாணி உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள் சாதாரணமாக ஒரு தீப்பெட்டியை வாங்குவதாக இருந்தாலும் சுமார் 10 கிலோமீற்றர் தூரம் சேதமடைந்த வீதியூடாக சென்றே அவற்றை பெற்றுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேற்படி கிராமங்களுக்கான பிரதான வீதிகள் எவையும் புனரமைக்கப்படாத நிலையில் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் எந்த வாகனத்திலும் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

குறித்த கிராமங்களுக்கான பிரதான வீதிகள் நீர்ப்பாசனத் திணைக்களம், பிரதேச சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுக்கு சொந்தமான வீதிகளாக காணப்படுவதுடன், பிரதான வீதியை புனரமைக்க நிதி இன்மையால் புனரமைக்க முடியாதுள்ளதாக திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப்பகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டு தற்போது ஆறு வருடங்களைக் கடக்;கின்ற போதும், இன்று வரை தமது அன்றாடப் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தும் பிரதான வீதிகள் புனரமைக்கப்படவில்லையெனவும், மழை காலங்களில் போக்குவரத்து செய்யமுடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது பனங்காமம் முதல் மல்லாவி வரைக்குமான போக்குவரத்துச் சேவைகள் கூட பாதிக்கும் நிலை காணப்படுவதாகவும் குறித்த வீதியினை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .