2025 மே 16, வெள்ளிக்கிழமை

அக்கராயனில் கொரோனா வைத்தியசாலை தீர்மானத்துக்கு ஒருமித்து எதிர்ப்பு

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்மானத்துக்கு, பிரதேச பொதுமக்களும் பொது அமைப்பின் பிரதிநிதிகளும், தங்களது எதிர்ப்பை ஒருமித்து உறுதியாக தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பில், பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல், அக்கராயன் வைத்தியசாலையில், கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில், இன்று (15) நடைபெற்றது.

இதன்போது, உலகநாடுகளில், ஓரிரு வாரங்களில் கொரோனா வைரஸூக்கான சிகிச்சை மய்யங்கள் கட்டியெழுப்பப்படுவதைச் சுட்டிக்காட்டிய மக்கள் பிரதிநிதிகள், அதுபோன்று, இலங்கை இராணுவத்தின் உதவியோடு சுகாதார அமைச்சால் ஏன் வைத்தியசாலைகளை அமைக்க முடியாதெனவும் வினவினர்.

இதற்கு பதிலளித்த சுகாதாரதுறையின் உயரதிகாரிகள், இது மேலதிகாரிகளின் உத்தரவெனவும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், தெரிவித்தனர்.

அதிகாரிகளின் பதிலை ஏற்க மறுத்த பொதுஅமைப்பினர், அவ்வாறு நீங்கள் நியாயம் கற்பிக்க முடியாதெனவும் கொழும்பில் உள்ள உயரதிகாரிகளுக்கு இங்குள்ள நிலைவரங்களைச் சரியாக எடுத்துச் சொல்ல வேண்டியது, இங்குள்ள அதிகாரிகளான உங்களது கடமையெனவும் கூறினர்.

அத்துடன், “இந்த முடிவை மேற்கொள்ளுவதற்கு முன்னர், உங்களோடு கலந்தாலோசித்திருப்பார்கள். அவ்வேளையில், இங்குள்ள நிலைவரங்களை நீங்கள் கூறியிருக்க வேண்டும். எங்களின் கருத்துகளை உங்களது உயரதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். தவிர அவர்கள் சொல்வதைச் செய்கிறோம் என எம்மிடம் வந்து கூறமுடியாது” எனவும் பொது அமைப்பினர் தெரிவித்தனர்.

முழுமையாகப் பயன்படுத்தப்படாதுள்ள ஒரு வளத்தை இவ்வாறு பெற்றுக்கொள்ள முனைந்தால், அதற்கு ஆட்சேபனைத் தெரிவித்திருந்திருக்க மாட்டோமெனத் தெரிவித்த பொது அமைப்பினர், ஆனால் முழுமையாகப் பயன்பாட்டில் உள்ள, இன்னும் தேவைகள் நிறைந்துள்ள இந்த வைத்தியசாலையை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கூறினர்.

நீங்கள், தங்களது கருத்துகளைச் சுகாதாரதுறை உயரதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லத் தவறின், தாங்கள் பஸ் பிடித்து கொழும்புச் செல்ல நேரிடும் அல்லது வீதியில் இறங்க வேண்டி வருமெனவும், பொது அமைப்பினர் எச்சரித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், அக்கராயன் வைத்தியசாலையை மாற்றிடத்துக்குக் கொண்டு செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடமானது, எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் காணப்படுகிறதெனவும் குடிநீர், கழிவகற்றல் போதுமான இடவசதி என்பன அங்கில்லையெனவும் கூறினர்.

வெளிநோயாளர் பிரிவை மாத்திரம் இயங்க வைப்பதற்குக் கூட போதுமான வசதிகள் இல்லையெனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீண்டநேரம் நடந்த இந்தக் கலந்துரையாடலின் இறுதியில், மக்களது ஒட்டுமொத்த எதிர்ப்பை உயரதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்கிறோமென, மாவட்டச் சுகாதாரதுறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .