2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’அனுமதியற்ற கடற்றொழில்களால் கடற்றொழில் முழுமையாக பாதிப்பு’

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற கடற்றொழில்களால் தங்களது கடற்றொழில் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக, முள்ளிவாய்க்கால் - அம்பலவன்பொக்கணை பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் அதிகளவான மனித உயிர்கள்  சொத்துகள் அழிக்கப்பட்ட இடமாகவும் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில், யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி எட்டு வருடங்கள் கடந்துள்ள போதும் அவர்களது வாழவாதாரம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கடற்றொழிலையே பிரதான வாழ்வாதாரத் தொழிலாக கொண்டு மக்கள் வாழும் இந்த பிரதேசத்தில் தமது தொழில்களை செய்யமுடியாத நிலை தோன்றியுள்ளதாகவும், இதனால் அன்றாட உணவுக்கே தாங்கள் அல்லற்படும் நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது, வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்ற மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற நிபந்தனை மீறிய தொழில்கள் சுருக்குவலை பயன்படுத்துதல் வெளிச்சம் பாவித்தல் அட்டைத்தொழில் நிபந்தனைகளை மீறிய கரைவலைத் தொழில் என்பனவற்றால் மீன்வளம் இல்லாது போயுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான தொழில்களால் கடல்வளம் முழுமையாக அழிந்த நிலையில், இப்போது வெளிமாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தமது வளங்களையும் அழிப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரவு முழுவதும் கடலில் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் மீன் இல்லாத நிலையில், ஒரு  மீன் இரண்டு மீன்களுடன் மாத்திரம் கரைதிரும்பிய நிலையினை அவதானிக்க முடிந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற நிபந்தனை மீறிய மற்றும் சட்டவிரோத தொழில்களை தடுப்பதன் மூலம் தமது தொழில்களை செய்ய முடியும் என்று, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .