Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை கூட தங்களுடைய அரசியல் கூட்டங்களாக தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களென முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐந்து வருட காலத்திலே இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு மாகாண சபையினுடைய ஆயுட்காலம் முடிவடைந்திருந்தது. இப்பொழுது மாகாண சபை உறுப்பினர்கள் எந்த ஒரு பதவி நிலையும் இல்லாமல் இருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது புதிதாக இன்னும் மாகாண சபை இரண்டாயிரத்தி பதினெட்டு முடிவடைந்த பின்பு புதிதாக ஒரு தேர்தலை இந்த அரசாங்கம் இன்னும் நடத்தவில்லை.
ஆனால், வவுனியா மாவட்டம் அல்ல வடமாகாணம் முழுதும் நடைபெறுகின்ற அபிவிருத்தி குழு கூட்டங்களிலே முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை இப்பொழுது அழைப்பது இல்லை, நடைமுறையிலும் இல்லை. ஒரு தேர்தல் நடைபெற்று புதிய மாகாண சபை உறுப்பினர்கள் அந்த பதவி நிலைக்கு வருகின்ற சந்தர்ப்பத்திலே பழைய மாகாண சபை உறுப்பினர்களை அழைக்காமல் விடுவதில் ஒரு நியாயம் இருக்கின்றது.
ஆனால் இன்னும் எங்களுடைய மாவட்டத்தினுடைய அபிவிருத்தி தொடர்பாகவும், எங்களுடைய மக்களினுடைய தேவைகள் தொடர்பாகவும், கதைக்க வேண்டிய சூழ்நிலையும் கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது. இங்கே அபிவிருத்தி குழுவிலே இருக்கின்றவர்கள் இதனை கருத்தில் கொள்வதில்லை. இது தொடர்பாக வவுனியா மாவட்டத்தினுடைய முன்னாள் அரச அதிபரிடம் நான் எடுத்து கூறியிருந்தேன். கூறிய பின்பும் கூட எங்களுக்கான அழைப்புகள் கிடைப்பதில்லை.
வவுனியா மட்டுமல்ல வட மாகாணம் முழுவதும் இருக்கின்ற முன்னாள் உறுப்பினர்களையும் அழைப்பதில்லை. எனிவரும் காலங்களிலாவது எங்கள் மாவட்டத்தினுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கான உரிமைகள் எம்மிடம் இருக்கின்றது. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இன்னொரு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் வரை மக்களுடைய பிரச்சினைகளை இந்த அபிவிருத்தி குழு கூட்டங்களிலே பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எமக்கு வழங்க வேண்டும்.
இது உரிய அதிகாரிகளுக்கும் அரசியல் ரீதியாக, மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தற்பொழுது உங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கமானது இரண்டாக பிரிவடைந்திருக்கின்றது. தற்சமயம் தேர்தல் வருகின்ற சந்தர்ப்பத்தில் உங்களுடைய கட்சியினுடைய வெற்றியில் பாதிப்பினை ஏற்படுத்தாதா?
நிச்சயமாக அவ்வாறான ஒரு பாதிப்பினை செலுத்தாது. மக்கள் சரியான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். தேர்தல் காலங்களிலே கட்சியிலே இருக்கின்றவர்கள் பிரிந்து செல்வது என்பது தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல வடக்கு - கிழக்கிலே இருக்கின்ற எல்லா கட்சிகளிலும் தேசிய கட்சிகளிலும் கூட இவ்வாறான நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த விதத்திலே இவ்வாறான பிரிவுகள் என்பது நிச்சயமாக தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய வெற்றியிலே சிறிதளவு கூட பாதிப்பை ஏற்படுத்த மாட்டாதெனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரையிலே பழைய, மூத்த உறுப்பினர்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் அனுபவம் வாய்ந்த உறுப்பினராக பலர் இருக்கின்ற போதிலும், தற்பொழுது புதிய உறுப்பினர்களை உங்களுடைய கட்சி அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன?
எல்லோருடைய மனங்களிலுமே இருப்பது புதியவர்கள் தேர்தலுக்கு வரவேண்டும் என்ற ஒரு நோக்கம். எல்லாருடைய மனங்களிலுமே இருக்கின்றது. ஆனால் புதியவர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை கொடுக்கின்ற சந்தர்ப்பத்திலே இவ்வாறான கேள்விகளும் வருவது யதார்த்தம். ஆனால் எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய தலைமை குழு, அரசியல் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவோடுதான் தற்பொழுது யாழ். மாவட்ட வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
மாற்றுத் அரசியல் தலைமை பற்றி தற்போது பேசப்படுகின்றது இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
மாற்றுத்தலைமை என்பது இன்னும் வடக்கிலே ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலிலே போட்டியிட்டு அதனுடைய வெற்றியிலே தங்களை அர்ப்பணித்தவர்கள் தான் இன்று மாற்று தலைமை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றுத் தலைமை குறித்து பேசுகின்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே தேர்தலிலே போட்டியிட்டிருக்கக்கூடாது.
எங்களோடு இருந்துவிட்டு உள்ளுக்குள்ளே இருக்கின்ற பிரச்சினையை கதைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினையை வெளியே தாங்கள் தலைவராக வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு மட்டும் தங்களுடைய அரசியல் சுயலாபத்திற்காகவே அவர்கள் மாற்றுத்தலைமை பற்றி கதைக்கின்றார்கள். இந்த மாற்று தலைமை குறித்து பேசுகிறவர்களை உற்று நோக்கினால் பதவியிலே இருக்கும் போது எதையும் சாதிக்காதவர்கள் மீண்டும் பதவிக்கு வருவதற்காக, பதவிகளை தக்கவைத்து கொள்வதற்காக தான் இவ்வாறான மாற்று தலைமைகள் தொடர்பாக மக்கள் மத்தியிலே கேள்விக் கணைகளாக தொடுக்கின்றார்கள் .
கடந்த இரண்டு மாதத்தில் புதிய ஆட்சியின் போக்கை எப்படி பார்க்கின்றீர்கள்?
அது எல்லோருக்கும் தெரிந்த கடும்போக்குதானே. இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெறுகின்ற போது எந்த அரசாங்கம் இருந்ததோ இன்று 2020ஆம் ஆண்டும் பழைய அரசாங்கம் தான் புதிய அரசாங்கமாக காட்சி அளிக்கின்றார்கள். அவர்களுடைய போக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் மென்மையாக இருக்கும். ஆனால் இப்பொழுது ஜனாதிபதியினுடைய கருத்துகள் சிங்கள மக்களை குளிர்மைப்படுத்துவதற்காகவும் சிங்கள மக்களுடைய வாக்குகளை பெறுவதற்காகவும் சிங்கள மக்களை குளிர்ச்சி படுத்துவதற்காகவும் அவர்களுடைய கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கும் எதிர்நிலையாளர்களின் கொள்கைக்கும் இடையில் மக்கள் எதிர்நிலையை எடுப்பதான தோற்றப்பாடு இருக்கிறது இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது கூட்டமைப்பினுடைய உருவாக்கத்துக்கு முன்னிலையில் நின்றவர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல, ஆனால் தமிழ் மக்களினுடைய எதிர்பார்ப்புகளை கடந்த காலங்களிலே ஆயுதம் ரீதியாக முன்னெடுத்து சென்றாலும் அவர்களுடைய நிலைப்பாடுகளை இனி அரசியல் ரீதியாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அங்கே இருக்கின்ற சில உறுப்பினர்களின் கருத்துகளால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனம் அடைகின்றது. கூட்டமைப்பில் இனி வரும் காலங்களிலே புதியவர்கள் உள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கூட்டமைப்பு நிச்சயமாக ஒரு சரியான பாதையிலே செல்லும்.
இங்கே எதிர்மறையான கருத்துகள் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்டதல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பிலே இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்கள் சிலரது கருத்துகளால் தான் இவ்வாறான எதிர்மறையான கருத்துகளை முன் வைக்கிறார்கள் என நினைக்கின்றேன். இந்த முறை நடைபெறபோகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே அவர்களுக்கு சரியான பதிலடியை மக்கள் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கூட்டமைப்பு உடைந்து சிதறி வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தலைமை இல்லாத நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
2009ஆம் ஆண்டுக்கு பின்பு, தமிழர்களுக்கான ஒரு சரியான தமிழ் மக்களினுடைய எதிர்காலம் குறித்து சரியாக சிந்திக்கக்கூடிய ஒரு தலைமைத்துவம் இல்லை. அது தான் உண்மை. கடைசி யுத்தத்தின் போது தன்னுடைய பிள்ளைகளை இழந்த தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இவ்வாறான தலைமை இல்லை. தமிழ் மக்களுடைய தலைமை வெற்றிடமாக தான் இன்னும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களிலே சரியான ஒரு தலைவர் அல்லது தலைமைகள் உருவாக்கப்படலாம்.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அது சரியானதா?
இந்த அரசாங்கம் தங்களுடைய அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கைகளுக்காக தான் இவ்வாறானவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்தாலும் வவுனியா மாவட்டத்தை எடுத்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாதது எங்களுக்கும் வேதனையளிக்கிறது.
ஏனென்றால் ஒரு பதவியில் இருக்கின்றவர்கள் அவர்களுடைய கீழ்நிலையிலிருந்து தங்களுடைய கருத்துக்களை சொல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட தங்களுடைய அரசியல் கூட்டங்களாக தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நான் நினைக்கிறேன் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு நடைபெற இருக்கின்ற இந்த பாராளுமன்ற தேர்தலில் பின்பு அவ்வாறான தலைமைகள் மாற்றப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
3 hours ago