Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தால் கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் பேரணி, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றது. பின்னர், மாவட்டச் செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றப்படுக்கையில் மிக மோசமான முறையில் மண்ணகழ்வு இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், செருக்கன் பகுதியில் அமைக்கப்படும் உப்பளத்தின் பணிகளை நிறுத்தி செய்கை நிலங்களைப் பாதுகாத்து தருமாறும், குறித்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளரும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான எம்.சிவமோகன் கருத்துத் தெரிவிக்கையில், இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் மிக மோசமான முறையில் மண்ணகழ்வு இடம்பெற்ற வருகின்றது.
குறித்த மண்ணகழ்வை தடுக்காதுவிடின், இரணைமடு குளத்துக்கு பாரிய ஆபத்து காணப்படுகின்றது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் தொட்டே குறித்த பகுதியில் மண்ணகழ்வு ஆரம்பித்துவிட்டது. அக்காலப்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் இருந்தார். அப்போது கட்டுப்படுத்த முடியாது போன மண்ணகழ்வை இப்போது உள்ள அரசாங்கம் கட்டுப்படுத்தும் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், “குறித்த காலப்பகுதியில் மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
“ஆனாலும் பொலிஸாரின் கவனக் குறைவும், அவர்களின் செயற்பாடுமே கட்டுப்படுத்த முடியாது போனமைக்கான காரணமாகுமென்றார்.
“தற்போது உள்ள அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்கள் இவ்விடயத்தில் அதிகம் அக்கறை செலுத்துவதால் இக்காலகட்டத்தில் இதனை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத்தினரின் உதவியுடன் மணல் அகழ்வை கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால் நாட்டில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு காணப்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இரணைமடு குளத்தை பாதுகாக்க படையினரை பயன்படுத்தவது பொருத்தமானது என கருதுகின்றீர்களா என அவரிடம் வினவியபோது, இரணைமடு குளத்தை முழுமையாக ஆக்கிரமிக்கவோ அதனை பாதுகாக்கவோ நாம் கேட்கவில்லை.
இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வை பாதுகாக்கவே நாம் கேட்கின்றோம். இவ்வாறான நிலையில் படையினர் தலையிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை நாம் வரவேற்பதாகவும் எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago