2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘இரண்டாவது விருப்பு வாக்குகளால் கலவரம் வெடிக்கும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்த ​நவசமசமாஜ கடசியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஏனெனில் வாக்களிப்பு குறைந்து இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பாரிய கலவரம் வெடிக்குமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தலில், இன வாதம், மத வாதம், பாசிச வாதம் போன்றவற்றைக் கொண்டு வெற்றி பெற ஒவ்வொரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் செல்லப் போகிறதெனவும் கூறினார்.

எனவே, வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், மக்கள் முன்னிலையில் தீர்வு தொடர்பில் வெளிப்படையாக செயற்படக் கூடிய தரப்பினரையே தெரிவு செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

மக்கள் பலரும் அரசியல்வாதிகள் மீது அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக வாக்களிக்காது விட்டால், கடந்த கால துன்பங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகுமெனவும் கூறினார்.

எனவே, தென்னிலங்கை மக்களாக இருந்தாலும் வடக்கு - கிழக்கு மக்களாக இருந்தாலும் அனைவரும் இணைந்து ஜனநாயகவாதியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

அது மட்டுமலலாது, தேர்தலில் முதலாவது வாக்கைத் தங்களுக்கும் இரண்டாவது வாக்கை ஐக்கிய தேசியக் கடசிக்கும் இடுமாறு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான நிலையில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணக்கூடிய சூழ்நிலை உருவாகினால், பாரிய மிக மோசமான கலவரம் உருவாகுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனை பயன்படுத்தி, இனவாத, மதவாத, பாசிசவாத சக்திகள் பாரிய கலவரத்தை உருவாக்க முற்படுவார்களெனத் தெரிவித்த அவர், எனவே கடந்தகால கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து இனவாத,மதவாத சக்திகளை மக்கள் தோற்கடிக்க வேண்டுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .