2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘ஓ,எம்,பி அலுவலகத்தால் பலிக்கடாவான கூட்டமைப்பு எம்பிக்கள்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சர்வதேச சமூகத்தை  ஏமாற்றும் நோக்கில், காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை ஆதரித்ததன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், வவுனியா - ஓமந்தையில் நேற்றயதினம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல் போன உறவுகள் தங்களுக்கு நீதி வேண்டி ஒரு போராட்டத்தை  நடத்தியிருக்கிறார்கள். அந்தவகையில்  இறுதிக்கட்ட போரிலே ஓமந்தை பகுதியில் வைத்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களை  சரணடைய சொல்லிய இராணுவம் அவர்களை, பஸ்களில் ஏற்றி சென்றனர். குறித்த சம்பவம் இடம்பெற்று இன்று 10 வருடங்களைக் கடந்தும், அவர்களுக்கு என்ன நிகழ்ந்து என்பதை அறியமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

“அத்துடன், பெற்றோர்களோடு சேர்ந்து அவர்களது பிள்ளைகளும் அழைத்துச் செல்லபட்டிருக்கிறார்கள். ஒரு வயதிலிருந்து ஐந்து வயதான குழந்தைகள் வரை பல நூற்றுக்கணக்கான சிறுவர்களும் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 10 வருடம் கடந்தும் அந்த குழந்தைகளுக்கு கூட என்ன நடைபெற்றது என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“உண்மையில் தற்போது இருக்கக்கூடிய இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஓர் உருப்படியான தீர்வை இதுவரை எட்டவில்லை. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் என்ற பெயராலே வெறும் கண்துடைப்புக்காக ஓர் அலுவலகத்தை  அமைத்திருக்கிறார்கள். இந்த அலுவலகத்தின் ஊடாக எந்தவித நீதியையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான நட்டஈட்டை கூட பெற்றுக் கொள்ளமுடியாது.

“வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் பெறுவதற்காகவே இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் உருவாக்கபட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தையும் ஏனையோர்களையும் ஏமாற்றி காலம் கடத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கவே இது உருவாக்க பட்டிருக்கிறது.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய அலுவலகம் தொடர்பான  சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வரும்‌ பொழுது என்னை தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.

“பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு, இந்த அலுவலகம் தொடர்பான  சாதக, பாதக நிலைமைகள் என்ன என்பதை பகிர்ந்து கொள்ளாமல் அவசர அவசரமாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள்.

“இன்று வடக்கிலும் கிழக்கிலும் உள்ள  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்  தங்களுக்கு குறித்த  அலுவலகத்திலே நம்பிக்கை இல்லை. அந்த அலுவலகம்  தேவையில்லை என்பதை  தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே இந்த அரசாங்கம் எம்மவர்களையும்  பலிகடா ஆக்கியிருக்கின்றார்கள். 

“ஆகவே, இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றவர்களுக்கு சர்வதேச சமூகம் விரைந்து ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என  கேட்டுக் கொள்கின்றேன் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .