2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடல் வளத்தை விற்க அனுமதிக்க மாட்டோம்

Princiya Dixci   / 2022 ஜூலை 12 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி, எமது கரையோரங்களில் உள்ள வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடிச் செல்வதாக, மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏற்கெனவே தாம் முறையிட்டும் தான்தோன்றித்தனமாக செயல்பாட்டு, நீண்ட காலமான தமது கோரிக்கையை யாரும் செவிமடுப்பதாக தெரியவில்லை எனவும் அவர்  தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் இன்றைய தினம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றோம். தயவுசெய்து எமது வளங்களை  எமது மக்களுக்காக விட்டு வையுங்கள்.

“எமது வளங்களை நீங்கள் அள்ளிச் செல்வதால் எமது மக்கள் மீண்டும் மீண்டும்  பட்டினி சாவை எதிர்கொள்கிறார்கள்.

“வட பகுதியில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எரிபொருள் அற்ற நிலையில் மாதக் கணக்காக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால்  கடலில் போடப்பட்டுள்ள அவர்களுடைய வலைகளை கூட கரைக்கு கொண்டு வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

“மேலும், வடக்கின் பல பகுதிகள்  அந்நிய தேசத்தவர்களுக்கு  விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை மீள்  பரிசீலனை செய்யப்பட வேண்டும். மீனவ சமுதாயத்தின் மீன்பிடி பிரச்சினை தொடர்பான சம்பவங்களை கையாளும் போது, அவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

“எதிர் காலத்தில் இங்கு உள்ள  அரசியல் தலைமைத்துவங்கள் இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை அந்நிய நாட்டுக்கு விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .