2025 மே 15, வியாழக்கிழமை

கிளிநொச்சிக்கு மூன்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்?

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியில் தற்போது மூவர் நிர்வாக மற்றும் நிதிவிதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, கிளிநொச்சி பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக (Deputy RDHS Kilinochchi) கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தகுதிவாய்ந்த வைத்திய கலாநிதி ஒருவர், மத்திய பொதுச்சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டு, அவரே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமைப்பொறுப்புகளை நிறைவேற்றுமாறு  (Covering up the duties of RDHS Kilinochchi) பணிக்கப்பட்டு அதற்கமைவாகக் கடமையாற்றி வருகிறார். 

இந்த நியமனத்துடன் 2017ஆம் ஆண்டில் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக (MS BH Chavakachcheri) மத்திய சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக (Deputy RDHS Killinochchi) கடமையாற்றி வந்த மருத்துவ அதிகாரியானவர் மாகாண சுகாதாரப் பணிமனைக்கு (PD Office) உள்வாங்கப்பட்டிருந்தார்.

இவரே, அண்மையில் யாழ்ப்பாணப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக (Deputy RDHS Jaffna) தேர்தல் காலத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரது (PDHS) ஆசீர்வாதத்துடன் சிறிது காலம் கடமையாற்றி, தேர்தல் திணைக்களம் தலையிட்டதன் பேரில் மீளவும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இணைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இவரது மாதாந்த சம்பளமானது கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினாலேயே (RDHS office Kilinochchi) கடந்த மாதம் வரை வழங்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

அதாவது, நிர்வாக அடிப்படையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையானது இரண்டு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்களை (Deputy RDHS) கொண்டு இதுவரை இயங்கி வந்துள்ளது.

இருப்பினும், கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையின் ஒதுக்கப்பட்ட ஆளணிகளின் பிரகாரம் (Approved Cadre) ஒரே ஒரு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கான ஆளணியே காணப்படுவதாக, மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்ட வருடாந்த முன்னேற்ற அறிக்கையில் (Annual Progress Report) காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தேர்தல் நடந்த 05.08.2020 அன்று விதிகளுக்கு முரணான வகையில் மத்திய சுகாதார அமைச்சினால் பிறிதொரு வைத்தியரும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கிளிநொச்சிக்கு  (Deputy RDHS Kilinochchi) நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, இதனடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக (Exceeding the approved cadre) தற்போது மூவர் கிளிநொச்சியில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களாக (Deputy RDHS Kilinochchi) சேவையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, வடக்கில் பல இடங்களில்,  குறிப்பாக முழங்காவில் உள்ளிட்ட பல ஆதார வைத்தியசாலைகளில் பணிப்பாளர் பதவிகள் தகுதிவாய்ந்தவர்கள் இன்றி வெற்றிடமாக உள்ளதாகவும்  இதனை கருத்தில் எடுத்து, பொருத்தமான நடவடிக்கைளை  மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுடன் தொடர்புகொள்ள  முற்பட்ட போது, அது பலனளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .