2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘சர்வதேசத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்’

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசாங்கத்தின் கபடத்தனமான நடவடிக்கைகளை, எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேசத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்” என ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் அரசியல் உயர் பீடக் கூட்டம், வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டமானது, சுமார் நான்கு மணித்தியாலயங்களாக இடம்பெற்றிருந்தது.

தற்கால அரசியல் நிலைப்பாடுகள், 20ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான விடயங்கள், கிழக்கு மாகாண சபையில் அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஆதரவளித்தமை தொடர்பான குழப்பகரமான நிலைமைகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் தொடர்ந்தும் செயற்படுவது தொடர்பாக கட்சிக்குள் உள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க அக்கட்சியின் தலைவர் பின்னடிப்பு செய்திருந்த போதிலும் ஊடகவியலாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் பிரகாரம் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

“எதிர்வரும் 21ஆம் திகதி வர இருக்கின்ற அரசியல் சாசன வழிகாட்டல் குழுவினுடைய இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடியிருக்கின்றோம். தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கையான வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி அரசமைப்பு முறைமை, மதசார்பற்ற நாடு, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை உட்பட பல அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்ட நிலைமையில் ஒற்றையாட்சிக்குள் அதிகார பரவலாக்கல் தொடர்பாகவே இது இருக்கும் என நாம் கருதுகின்றோம். எனினும் 21ம் திகதி அறிக்கை வெளிவந்த பின்னர் எமது அரசியல் குழு கூடி அதனை ஆராய்ந்து அதன் நன்மை தீமை தொடர்பாக மக்களுக்கு விளங்கப்படுத்துவது என்கிற முடிவினை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமை அமையத்தில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மிகவம் அவமதித்து, உதாசீனப்படுத்தி எமக்கு கால அவகாசம் தேவை எனக் கூறுவதும் அதனை நடைமுறைபடுத்த மாட்டோம் என்கின்ற மேசாமான நிலைமைக்கு இதனை கொண்டுவந்திருக்கின்றார்கள்.

இதேவேளை எமது கட்சி உறுப்பினர் 20ஆவது அரசமைப்புக்கு ஆதரவு அளித்தமை தொடர்பாகவும் கலந்துரையாடியிருக்கிறோம். குறிப்பாக இது தொடர்பான விளக்கம் அங்கு இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இத்திருத்தங்கள் பிரயோசனமான திருத்தங்கள் என்றே சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடிய பின்னர் தவறென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையில், 20ஆவது அரசமைப்புக்கு ஆதரவளித்தமை தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் அரசியல் பீட உறுப்பினருமான துரைரட்ணத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு பதிலளிக்க முடியாது என கூறி அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றார்.

இக்கூட்டத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமா காண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம், முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினர் குமரேஸ், மூத்த உறுப்பினர் கே.அருந்தவராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .