2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’தமிழ் உறுப்பினர்களின் ஒற்றுமையை எதிர்பார்க்கிறேன்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு - கிழக்கில் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் அரசியல் விடிவுக்காக இணைந்து பயணிக்க வேண்டுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அந்த ஒற்றுமையை தான் எதிர்பார்த்து நிற்பதாகவும் கூறினார்.

வவுனியா - சாளம்பன் பகுதியில், நேற்று  மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பானது கடந்த தேர்தலில், 16 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளதெனவும் வன்னியில் கூட ஓர் ஆசனத்தை இம்முறை தாம் இழந்திருக்கின்றோமெனவும் கூறினார். 

இந்தத் தேர்தலில், ஆட்சியாளர்கள் அதிகாரப் பலம் மற்றும் பணபலம் எனபவற்றைப் பயன்படுத்தியிருந்தார்களெனச் சாடிய அவர், அதனை விட தம்மவர்கள் பிரிந்துநின்று இந்தத் தேர்தலைச் சந்தித்தார்களெனவும் சுட்டிக்காட்டினார்.

“இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தேசிய கட்சிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. அது ஏன் என்பதை எம்மால் இன்னும் ஊகிக்கமுடியவில்லை. எமது கட்டமைப்புகளை சிதைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்ற நிலையில், சிலர் ஏன் இவ்வாறான மனநிலையில் இருந்தார்கள் என்பது வேதனையானவிடயமாக இருக்கின்றது. எமக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளை நாங்கள் புரிந்துகொள்ளாத நிலையில் இருந்திருக்கிறோம்” எனவும், சார்ள்ஸ் எம்.பி கூறினார்.

கடந்தத் தேர்தலில், தனக்கு கிடைத்த விருப்புவாக்குகள் கூட இம்முறை குறைந்தே காணப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், எனவே தேர்தல் முடிவை ஒரு பாடமாகவேநான் எடுத்துக்கொண்டிருக்கிறேனெனவும் கூறினார்.

“அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வில் கூட, தனிச்சிங்கள கொடியை பறக்கவிட்டு இந்த நாடு சிங்கள் பௌத்தர்களுக்குரியது என்ற செய்தியை அவர்கள் சொல்லியிருககின்றார்கள். ஆட்சியாளர்களின் செயற்பாடு தமிழ் மக்களை அச்சம் கொள்ளவைத்துள்ளது.

“அத்துடன், வடக்கு - கிழக்கில் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அரசியல் விடிவிற்காக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அந்த ஒற்றுமையை நான் எதிர்பார்த்துநிற்கின்றேன்” எனவும், அவர் கூறினார்.

இதேவேளை, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் இருக்கின்ற அரசாங்கத்தோடு பேசுவதற்கு நாம் பின்னிற்கவில்லையெனத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்புமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமருடனான சந்திப்பில் ஏற்கெனவே தெரிவித்திருந்தோமெனத் தெரிவித்த அவர், எனவே நாடாளுமன்றம் கூடிய பின்னர் தமது கோரிக்கைகளில் மிகப் பிரதானமான விடயமாக இந்த விடயம் இருக்குமெனவும் கூறினார்.

“அந்தவகையில், வடக்கு - கிழக்கில் எமது மக்கள் தனித்துவமாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும். அதுவரைக்கும் நாம் உழைக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .