2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘நிலங்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“புத்தாண்டை எமது பூர்விக நிலத்தில் கொண்டாடுவதற்கு இந்த அரசாங்கம் எமது நிலங்களை விடுவிக்க வேண்டும்” என, கடந்த 140 நாட்களுக்கு மேலாக போராடி வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதலாம் நாளான மே தினத்தன்று தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக் கோரி, கிளநொச்சி இரணைதீவு மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 140 நாட்களாக, இன்றும் (17) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், “எங்களுடைய நிலம் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்று எங்களுக்குத் தென்படுகின்றது. ஆனால் எப்போது விடுவிக்கப்படும் என்பது இதுவரை எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. கடந்த 140 நாட்களிலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், இரணைதீவை விடுவிக்க முடியாது என்று பல காரணங்களை பாதுகாப்புத் தரப்பு தெரிவித்திருக்கின்றது. 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தலைமையில், பூநகரி கடற்படை முகாமில் கடந்த மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது, நீண்ட இழுபறிக்குப் பின்னர், பொதுமக்களுக்குச் சொந்தமான 186 காணிகளை மடடும் அடையாளப்படுத்தி, பாதுகாப்புத் தரப்பினுடைய அனுமதியைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பூநகரி பிரதேச செயலர் தலைமையிலான குழுவினர் கடந்த வார அங்கு சென்று திரும்பியிருக்கின்றனர்.

காணிகளை அளவிடுகின்ற, அடையாளப்படுத்துகின்ற வேலைத் திட்டங்களுக்கு, 15 நாட்களுக்கு மேல் தேவையென பிரதேச செயலாளர் குறிப்பிட்டிருந்தார், 

எனவே, விரைவாக எங்களுடைய காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு குறித்த காணிகளை விடுவித்து, நாங்கள் எமதுசொந்த நிலத்தில் மீள்குடியேறி வாழ்வாதாரத் தொழில்களைச் செய்வதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ மக்களாகிய நாங்கள், இவ்வாண்டு பாலன் பிறப்பையும் புத்தாண்டையும் எமது பூர்வீக நிலத்தில் கொண்டாட வேண்டுமென்ற அவாவில் இவ்விடத்தில் இருக்கின்றோம்

இந்த மாத்திலோ அல்லது அடுத்த மாத நடுப் பகுதியிலோ எங்களை எங்கள் நிலத்தில் மிக விரைவாக போய்க் குடியேற இந்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .