2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘பகல் கனவு காணக் கூடாது’

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாடிமன்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம், பகல் கனவு காணக் கூடாதெனவும் கூறினார்.

வவுனியாவில், நேற்று  (25) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ​தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற ஆரம்ப உரையில், இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி கூறவில்லையெனவும் இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் எதுவும் கூறவில்லையெனவும் சாடினார்.

தற்போதும் பெரும்பான்மையின மக்களுக்கு முன்னுரிமையளித்து, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டதை விட மேலும் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், அவரது உரை அமைந்துள்ளதெனவும், செல்வம் குற்றஞ்சாட்டினார்.

தற்போதைய அமைச்சரவையில் இந்து கலாசாரம், கிறிஸ்தவ கலாசாரம் ஆகிய அமைச்சுக்கள் இல்லையெனத் தெரிவித்த அவர், இதைவிட ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனரெனவும் அதைவிட கச்சேரி உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானதெனவும் கூறினார்.

எனவே, எதிர்வரும் காலங்களில், அனைத்து திணைக்களங்களிலும் இராணுவத்தினுடைய செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதை உணரக் கூடியதாகவுள்ளதெனவும், செல்வம் கூறினார்.

அத்துடன், தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என வாழ்கின்ற நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லையெனத் தெரிவித்த அவர், ஒரே சட்டத்தை மதங்களின் மீது பயன்படுத்துவதன் மூலம், அந்த மக்களின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு, மதங்களின் மேல் கைவைக்கும் நிலைமையும் ஏற்படுமெனவும் கூறினார்.

“எந்தவோர் உரிமையையும் வழங்காது, அபிவிருத்தியை மட்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என உணர முடிகிறது. எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். அதேபோல் இனப் பிரச்சினைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். 

“ஆகவே அபிவிருத்தி ஊடாக தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்காது விட்டு விடலாம் என்பதில், அரசாங்கம் பகல் கனவு காணக் கூடாது” எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .