2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘மாணவர்களின் நேரங்களில் பஸ் சேவையை நடத்தவும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து நேரங்களிலேயே, பஸ் சேவைகளை நடத்த வேண்டுமென, இலங்கைப் போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை அதிகாரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில், நேற்று (05) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கின் அம்பாள்குளம், வன்னிவிளாங்குளம் உட்பட பல பகுதிகளில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து நேரம் தவிர்ந்த ஏனை நேரங்களில் பஸ் சேவைகள் நடைபெறுவதால், மாணவர்கள் நடந்து செல்வதாகவும் பஸ் சேவைகளை மாணவர்களின் போக்குவரத்து நேரங்களில் நடத்த வேண்டுமென்று, கூட்டத்தில், பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த இலங்கைப் போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை அதிகாரி ஒருவர், அம்பாள்குளம், வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், நேரம் தாழ்த்தி ஆரம்பித்து முடிவடைவதால், பஸ் சேவைகளை நடத்த முடியாது இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த துணுக்காய் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சஞ்சீவன், போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிப்பதற்கு, துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை அனுமதி வழங்கியுள்ளதாகவும் காலை 7.30 மணிக்கு பாடசாலை தொடங்குமானால், மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் பாடசாலைகளுக்கு நடந்து வரவேண்டுமெனவும் கூறினார்.

அதனடிப்படையில், போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மாங்குளம் மகா வித்தியாலயம் உட்பட சில பாடசாலைகள், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இயங்குவதாகவும், அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, பாடசாலை மாணவர்களின் நேரங்களில் மாந்தை கிழக்கில் பஸ் சேவையை நடத்துமாறு பணிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .