Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேசத்தின் 3,696 வாக்காளர்களை, நெடுங்கேணி பிரதேசத்தின் பட்டிக்குடியிருப்பு கிராமத்துடன் இணைத்து, இனவிகிதாசாரத்தை குழப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழர் நிலத்தை அபகரித்து, வெலிஓயா பகுதியை விஸ்தரிப்பதன் மூலம், அதனை தனிப் பிரதேச செயலாளர் பிரிவாக மாற்ற திரை மறைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றும் கூறினார்.
வவுனியா, நெடுங்கேணி, மருதோடை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,
'கடந்த காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்தத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றியதன் விளைவாகத்தான், இந்த நாடு பாரியதொரு யுத்தத்தையும் அழிவையும் சந்திக்க நேர்ந்தது. அன்று மிதவாதத் தலைவர்களோடு இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசித் தீர்த்திருந்தால், 30 வருட காலமாக, யுத்தமொன்று ஏற்பட்டிருக்காது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ஆயுதம் தூக்கவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.
ஆட்சி மாற்றத்தின் பிறகும், கடந்த அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலையே, முக்கியமாக குடியேற்றம், காணிப் பறிப்புகள் போன்றவற்றையே இந்த அரசாங்கமும் நடைமுறைபடுத்தப் பார்க்கின்றது. வெலிஓயா பிரதேசத்தில் இருக்கின்ற 5 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குரிய கிராமங்களைச் சேர்ந்த 3,696 வாக்காளர்களை, வவுனியா வடக்கின் நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்புக் கிராமத்துக்குள்ளே கொண்டுவந்து இணைக்கின்றார்கள்.
ஏற்கெனவே இருக்கின்ற பட்டிக்குடியிருப்புக் கிராமம், 245 தமிழ் வாக்காளர்களைக்கொண்ட ஒரு கிராம சேவையாளர் பிரிவாகும். ஒரு மாவட்டத்தில் இருக்கின்றவர்களை இன்னுமொரு மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பிலே இரகசியமாகப் பதிவு செய்கின்றார்கள். அவ்வாறு பதிவதன்மூலம் என்ன செய்ய நினைக்கின்றார்கள்? ஆகவே, தொடர்ந்தும் கடந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையே, இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றது.
வெலிஓயாவுக்குள் அடங்குகின்ற கஜபாகு மொனரவௌ, கவியாணபுர கிராமம், எத்தாவெட்டுவ, நுவவௌர, சம்பத்நுவர, நிக்வௌ போன்ற ஐந்து கிராமங்களின் வாக்காளர்களையே, பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவுக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வளவு இழப்புக்கள் மற்றும் அழிவுகளைச் சந்தித்ததற்குப் பின்னரும்கூட, இன்னும் இந்த நிலைமை தொடர்கிறது.
வெறுமனே சர்வதேசச் சமூகத்தை ஏமாற்றுவதற்காகத்தான் இந்த விடயங்களைக் கையாளுகின்றார்களா?, அல்லது காணாமற்போனவர்களை உண்மையாகக் கண்டறிய வேண்டும், போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் இந்த விடயங்களைக் கையாளுகின்றார்களா? அப்படியாக இருந்தால் அதற்கான செயற்பாட்டை இதயச் சுத்தியோடு செய்ய வேண்டும்.
குறித்த விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு நேரடியாகப் பேசவேண்டிய தேவை இருக்கின்றது. வெறுமனே, நாடாளுமன்றத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகின்றன. இதை நான், காணாமல் போனோர் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போதும் தெரிவித்திருக்கின்றேன்.
தமிழர் நிலத்தை அபகரித்து வெலிஓயா பகுதியை விஸ்தரித்து அதனை தனிப்பிரதேச செயலாளர் பிரிவாக மாற்றத் திரை மறைவில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே, அப்பகுதியைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது நிலங்களில் குடியேறவேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. அவர்களது காணிகளில், வாழ்வாதாரத் தொழில்களைச் செய்து அவற்றை பயன்படுத்திக்கொண்டு இருப்பதன் மூலமே, சொந்த இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
28 minute ago