2025 ஜூலை 16, புதன்கிழமை

அழகு சிகிச்சை நிலையங்களால் வரக்கூடிய ஆபத்துக்கள்

Kogilavani   / 2012 ஜனவரி 02 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது உடலை அழகாக்கிக் கொள்வதற்காக அழகு சிகிச்சை நிலையங்களை நாடுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அழகு சிகிச்சை நிலையங்களை நாடும் போது மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்த் தொற்றுதல்களை நாம் பெற்றுக்கொள்ளும்  இடங்களில் அழகு சிகிச்சை நிலையங்களும் ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.

அழகு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு செல்லும்போது கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு:

மீன்தொட்டி குளியல்

அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் அழகு சிகிச்சை நிலையங்களில் மீன்கடி சிகிச்சையை தடை செய்தது.  மனிதர்களின் தோலின் கடினமான பகுதிகளை சிறிய மீன்கள் கடித்து அகற்றும் சிகிச்சை இது.

ஆனால் இவ்வாறான சிகிச்சைக்குள்ளாகும் வாடிக்கையாளர் ஒருவர் எச்.ஐ.வி தொற்றுதலுக்கு உள்ளாகியவராக இருந்தால் அதே தொட்டியில் இச்சிகிச்சையைப் பெறும் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீன் மூலம் அல்லது தொட்டியிலுள்ள மாசடைந்த நீர் மூலம் வைரஸ் கிருமிகள் உடலுக்குள் புகுந்துகொள்ள சிறிதளவு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனால், வெட்டுக் காயங்கள் உள்ளவர்கள் இச்சிகிச்சைகளை செய்துகொள்ளக்கூடாது. நீரிழிவு போன்ற நோய் உடையவர்கள் இவ்வாறான குளியலை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.

சீப்புகள் மூலம் பேண்கள் பரவுதல்

சில ஆடம்பர சிகை அலங்கார நிலையங்களில்கூட நாள் முழுவதும் ஒரே சீப்பையே வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பயன்படுத்துவது சாதாரணமாகவுள்ளது. ஒவ்வொரு தடவையும் அச்சீப்புகளை பயன்படுத்தியபின் மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவதற்குமுன் சுத்திகரிப்பது அரிது.

ஒரு தடவை தலைமயிரை கழுவிவிட்டால் பிரச்சினையில்லை  என பலர் நினைக்கக்கூடும். ஆனால் இதனூடாக ஒருவரின் தலையிலிருந்து மற்றொருவரின் தலைக்கு ஈறுகள், பொடுகுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

ஒரு சிறந்த சிகையலங்கார கலைஞர் வாடிக்கையாளர்களுக்கும் புதிய சீப்பை அல்லது கிருமிநீக்கம் உரியமுறையில் சுத்திகரிக்கப்பட்ட சீப்பை பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைக்கூடும்.

வோஷ்பேசின் மூலமான தலைவலி

தலைக்கு ஷம்போ பயன்படுத்த  தலைமயிரை கழுவும்போது  பொருத்தமற்ற முறையில் கழுத்தை வோஷ்பேசின்களில் பிடித்துக்கொண்டிருந்தால் உபாதைகளை ஏற்படுத்தி விடுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கழுத்துப் பகுதியை முறையற்ற விதமாக சரித்து வைத்திருந்தால் மூளைக்கு குருதி செல்வது தடைப்பட்டு தலைச்சுற்று, கழுத்துவலி முதலான உபதைகள்  ஏற்படலாம்.

பாதங்களை கழுவ பயன்படுத்தும் உபகரணங்களால் ஏற்படும் தொற்றுகள்

அழகு  எனும்போது பலர் பாதங்களைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பாதங்களின் அழகு, ஆரோக்கியமும் மிக முக்கியமானவை. எனினும் பாத அழகு சிகிச்சை நிலையங்களில் பாதங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமாக பேணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாத அலங்கார சிகிச்சை நிலையமொன்றின் வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம்  110 பேருக்கு கொப்புளங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
காயங்கள் ஏற்பட்ட நிலையில் இத்தகைய சிகிச்சையை செய்துகொள்வது அதிக ரிஸ்கை ஏற்படுத்தும் எனவே. இத்தகைய சிகிச்சைகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் கால்களை ஷேவிங், வக்ஸிங் செய்துகொள்வதை தவிர்ப்பதன் மூலம் வெட்டுக் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து அதன் மூலம் தொற்றுகள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கமுடியும் என டாக்டர் சாம் பன்டிங் என்பவர் சிபாரிசு செய்துள்ளார்.

சுத்திகரிக்கப்படாத கத்தரிகளால் ஏற்படும் தொற்றுகள்

அழகு சிகிச்சை நிலையங்களில் தலைமயிர் கத்தரிக்கப்படும்போது தற்செயலாக காதோரத்தை வெட்டிவிடலாம் அல்லது நகம் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் ஊசிகளால் குத்தப்பட்டு காயம் ஏற்படலாம். இவை எதிர்பார்க்கப்படாத அபூர்வமான விபத்துகள்தான்.

ஆனால் இவற்றின்போது இரத்தம் வெளியாகி அது கத்தரிகள், ஊசிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வுபகரணங்களை முறையாக சுத்திகரிக்காமல் பிறருக்கு பயன்படுத்தும்போது குருதிமூலம் பரவும் நோய்களின் தொற்றுக்கு உள்ளாகலாம்.

சவரம் செய்யும்போது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனி சவர அலகை பயன்படுத்தவேண்டுமென்ற விதி இப்போது கண்டிப்பாக அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வக்ஸிங் மூலமான எரிகாயங்கள்

கை மற்றும் கால்களில் காணப்படும் வேண்டாத உரோமங்களை அகற்றுவதற்கு பயன்படும் ஹெட்  வக்ஸிங் சிகிச்சை  முறையாக கையாளப்படாவிட்டால் அது மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இச்சிகிச்சை முறையாக கையாளப்படாவிட்டால் தோலில் எரிவு முதலானவை ஏற்படலாம. பிரிட்டனில் லிவர்பூல் நகரத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்று, இவ்வாறான அழகுசிகிச்சை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் பெயர் பெற்று விளங்குகிறது.

ஹொட் வக்ஸிங் சிகிச்சை மூலம் எரிகாயத்திற்கு உள்ளான பெண்ணொருவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர்கூட தோலில் நிறமாற்றம் ஏற்பட்டதாக அச்சட்டத்தரணிகளின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

அதையடுத்து குறித்த அழகுசிகிச்சை நிலையத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து 4500 ஸ்ரேலிங் பவுண்களை நஷ்ட ஈடாக பெற்றுக்கொடுத்ததாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கிறது.
 


You May Also Like

  Comments - 0

  • kc.muhaimin Sunday, 12 February 2012 01:07 AM

    இயற்கையில் உள்ளதே இயற்கை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X