2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மன அழுத்தத்தை அதிகரிக்கும் வேலைத்தளங்கள்

Kogilavani   / 2013 மார்ச் 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மன அழுத்தம்' என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மன அழுத்தங்கள் பல வழிகளில் ஏற்படுகின்ற போதிலும் தொழில்தளங்களில் நாம் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் இத்தகைய மனஅழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் செயற்பாடுகளாக அமைந்துள்ளன.

இக்கருத்துக்களை நியப்படுத்தும் வகையில் ஆய்வுத்தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வேலைத்தளங்களில் ஏற்படும் கசப்பான அனுபவங்களானது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் மன அழுத்தம் என்பது இன்று உலகளவில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தமது ஆய்வுத் தகவல்களில் தெரிவித்துள்ளனர்.

அலுவலகங்களில் தொழில்புரிபவர்கள், பாதுகாப்பு படையினர், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முதல் அனைவருமே இத்தகைய மன அழுத்தங்களுக்கு உட்படுபவர்களாகவே உள்ளனர்.

இரவு பகல் பாராமல் தொழில்புரிபவர்கள் இவ்வாறான மன அழுத்தங்களுக்கு அதிகமாக உள்ளாகுவதாகவும் மேற்படி ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் ஆத்மதிருப்தியுடன் வேலை செய்பவர்களை நாம் இன்று அனேகமாக காண்கின்றோம். இவ்வாறானவர்கள் வீடுகளில் தமக்கான நேரத்தை செலவிடுவதைவிட தொழில் தளங்களிலேயே அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.

இதனால் குடும்பத்தினரின் முரண்பாடுகளையும் இத்தகையானோர் எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறு தொழில்புரிவர்களுக்கு தொழில்தளங்களில் எதிர்நோக்கும் சிறிய அல்லது பாரிய பிரச்சினை என்றாலும் அது அவர்களை மனதளவில் பாதிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

போட்டி, பொறாமை மிகுந்த இன்றைய சூழலில் ஒருவரை வெட்டி வீழ்த்திவிட்டு உயர செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடே ஒவ்வொரு துறைகளிலும் காணப்படுகின்றது.

இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் திறமைகளுக்கு மதிப்பளிக்கப்படாமை, திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றமை என்று வரும்போது ஆத்ம திருப்தியுடன் தொழிலாற்றுபவர்கள் துவண்டு விடுகின்றனர்.

இது அவர்களை மிகவும் பாதிப்பதாக அமைவதுடன் அவர்களை மன அழுத்தத்திற்கும் தள்ளிவிடுகின்றது. இது நாளடைவில், மனநல பாதிப்பு, மாரடைப்பு என பலநோய்களுக்கு இயல்பாகவே அழைத்துசென்று விடுகின்றது.

அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

பிரிட்டன் இராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 இராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம் போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவில், கூட்டு நிறுவனங்களில் தொழில்புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் மன அழுத்தம் பெருமளவு அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளில் 66 சதவீதம் பேர் தனிமையை உணர்கின்றனர். 77 சதவீதம் பேர் தமது மகிழ்ச்சியையும் வருத்தங்களை யாருடனாவது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். கடுமையான போட்டிச் சூழலின் காரணமாக தங்கள் விருப்பத்துக்கு மாறாக அதிகம் உழைப்பதாக 63 சதவீதம் பேர் கூறியுள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள மன நல அறக்கட்டளை ஆய்வு மையம் ஒன்று அலுவலகங்களில் தொழிலபுரிபவர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தம் தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

இவ் ஆய்வறிக்கையில்,

தாம் புரியும் தொழிலானது அவர்களது வாழ்க்கையில் மிகவும் இறுக்கமான ஒரு நிலையை தமக்கு தோற்றுவிப்பதாக மூன்றில் ஒரு பங்கினர் தெரவித்துள்ளனர்.

இதன்காரணமாக 57 வீதமானவர்கள் தமது அலுவலக நேரத்தின் பின் மதுபானம் அருந்துபவர்களாக காணப்படுகின்றனர். இவர்களில் 14 வீதமானவர்கள் தமது அலுவலக நேரத்தில் மதுபானம் அருந்துவதாக அவ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணியிடங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக 7 வீதமானவர்கள் தற்கொலைக்கு முற்படுவதாகவும் அவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 18-24 வயதுகிடைப்பட்டவர்களிடையே அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களில் ஏற்படும் மனக்கசப்பான சம்பவங்கள் காரணமாக 11 வீதமானவர்கள் தமது தொழிலை இராஜினாமா செய்துவிடுகின்றனர். இவர்கள் தமது பதவியிலிருந்து வெளியேறுவதை பற்றி தீர்மானிக்கின்றனர்.

இதேவேளை, தமது அலுவலக தலைமை அதிகாரிகளிடம் தமது பிரச்சினை தொடர்பில் பேசுபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் தொழில்புரிபவர்களுக்கு மனநலம் சார்ந்த செயற்திட்டங்கள் தேவை என மேற்படி அமைப்பின் தலைமை அதிகாரி போல் பாமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆறில் ஒரு வீதமானவர்கள் மனதளர்ச்சிக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். பெரும்பாலான மேலதிகாரிகள் இவ்வாறானவர்களுக்கு ஆதரவு அல்லது ஊக்குவிப்பு வழங்குவதில்லை என நாம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளோம்' என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழில் என்பது மிகப்பெரிய மன அழுத்தத்திற்கான காரணி என 34 வீதமானவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தூக்க மாத்திரை, அல்லது மன அழுத்தங்களை குறைக்கும் மருந்து, அல்லது புகைபிடித்தல் போன்றவற்றை கடைப்பிடித்து வருவதாகவும் இவை அவர்களுக்கு பிரத்தியேகமான வேறு நோய்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் என்பது உயிராபத்தை விளைவிக்கும் காரணியாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன அழுத்த அதிகாரிப்பானது இதய நோயாளிகளுக்கு மரணத்தை விளைவிக்கும் காரணியாக அமைந்துள்ளமை பற்றி பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன என கலாநிதி லானா வடிகின்ஸ் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X