2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

110 நாள் உண்ணாவிரதமிருந்து சாதனை

Freelancer   / 2023 நவம்பர் 02 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதுடைய கிரிஷா எனும் சிறுமி, மூன்று மாதங்கள் மற்றும் 20 நாட்கள் தொடர்ந்து உணவின்றி, 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி கிரிஷா, 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அபூர்வ சாதனை படைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இதனை ஒரு பிரம்மாண்டமான கொண்டாடமாக நடத்தியுள்ளனர்.



ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமி முதலில் 16 நாட்களும், அதன்பிறகு அதனை அப்படியே 110 நாட்களாக நீட்டித்து உண்ணாவிரதம் இருந்துள்ளாராம்.

மிகவும் அபூர்வ சாதனையான இதனை அச்சிறுமியின் குடும்பத்தினர் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன் நடத்தினர். சில சாதுக்கள் மற்றும் சாத்விகள் இப்படி நீண்ட காலம் தவம் செய்தாலும், நீண்ட கால விரத அனுபவம் இல்லாத இளம்பெண்களுக்கு இது அசாதாரணமானது என்று ஜெயின் மத குருக்கள் வியந்து போய் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி கடந்த ஜூலை 11-ம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். இதுபற்றி கிரிஷாவின் தாயார் கூறுகையில், முதலில் 16 நாட்கள் மட்டுமே கிரிஷா உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இந்த கால கட்டத்தில் என் மகள் கிரிஷாவுக்கு உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

இதையடுத்து கிரிஷா தனது ஆன்மீக குருவான முனி பத்மகலாஷ் மகராஜிடம் அனுமதி பெற்று உண்ணாவிரத்தை 26 நாட்களாக நீடித்தார்.பின்னர் 31 நாட்களுக்கு இலக்கு வைத்து சிறுமி செயல்பட்டார். விரைவில், அந்த இலக்கு 51 நாட்களுக்கு மாறியது.

புனித பர்யுஷன் என்ற மாதத்தில் தனது விரதத்தை முடிக்க 51 நாட்களை வெற்றிகரமாக முடித்த பிறகு மீண்டும் 20 நாள் உண்ணாவிரதத்தை நீடித்தார்.

இதில் 40 நாட்கள் வரை, சிறுமி பள்ளிக்கும் சென்று கொண்டிருந்தாள். 71 நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினருக்கே சந்தேகம் இருந்தாலும், 108 நாட்கள் என்ற கடினமான இலக்கை அடைய வேண்டும் என்று சிறுமி விரும்பி உள்ளார். அதற்கு குருக்களும் சம்மதித்தனர்.

ஒக்டோபர் 28 அன்று 110 நாட்களில் தனது விரதத்தை சிறுமி முடித்துள்ளார். 108 நாட்களுக்கு பதில் 110 நாட்கள் வரை விரதம் இருந்துள்ளார்" என சிறுமியின் தாயார் கூறினார்.


தற்போது 11ம் வகுப்பு படித்து வரும் கிரிஷா உண்ணாவிரதத்தின் போது மன வலிமை பெற மத நூல்கள் மற்றும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தி வந்தாராம். மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கிரிஷாவின் செயல் எடுத்துக்காட்டியுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மூன்று மாதங்களில், க்ரிஷா சுமார் 18 கிலோ எடை குறைந்துள்ளார். சிறுமியின் ஆன்மீக குரு முனி பத்மகலாஷ் மகராஜ் கூறுகையில், "பொதுவாக 108 நாள் விரதம் இருப்பதற்காக சில பக்தர்கள் சபதம் எடுத்து உள்ளனர், ஆனால் அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கும்.

ஆனால் சிறுமி அசாதாரணமாக இதை ஒரே முயற்சியில் செய்துள்ளார். நீண்ட கால உண்ணாவிரதத்தின் முன் அனுபவம் இல்லாமல் இந்த சாதனையை யாரும் அடைந்தது இல்லை. இது சிறுமியின் சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தைக் காட்டுவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு மனித மனம் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, சாத்தியமற்றதாக தோன்றும் சாதனைகளை அடைய முடியும்" என்று ஆன்மீக குரு தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X