2025 மே 14, புதன்கிழமை

30 நாய்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்த முதியவர்

Menaka Mookandi   / 2013 மே 09 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்மார்க்கில் தனியே வசித்து வந்த முதியவர் ஒருவரின் வீட்டிலுள்ள  குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டென்மார்க் வடக்கு, டோயரிங் நகரிலுள்ள ஒரு வீட்டில் அடிக்கடி நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்பதை அடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டினை அடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த 66 வயதான முதியவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து மீண்டும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸார் அம்முதியவரின் வீட்டுக்குச் சென்ற போது அவரது வீடு பூட்டியிருந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய வீட்டின் பூட்டை உடைத்த பொலிஸார், வீட்டுக்குள் கடும் சோதனைகளை நடத்தினர்.

இதன்போது அங்கிருந்து பாம்பு ஒன்றும் நான்கு நாய்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து 30 நாய்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நாய்களின் உடல்கள் தொடர்பில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவை எப்படி இறந்தன? முதியவர் அந்நாய்களைக் கொன்றாரா? என்பவை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்ற அதேவேளை, தலைமறைவாகியுள்ள முதியவர் தொடர்பிலும் வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X