Shanmugan Murugavel / 2019 மே 08 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆறாவது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள பங்களாதேஷைப் பற்றி இப்பத்தி ஆராய்கிறது.
1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வரும் பங்களாதேஷ், கடந்த காலங்களில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் காண்பித்திருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் காலிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.
அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரையில் மாபெரும் பாய்ச்சலொன்றை பங்களாதேஷ் நிகழ்த்தியிருந்தாலும் அதன் பெறுபேறுகள் தொடர்ச்சியானதாக இல்லை.
இந்நிலையில், லீக் சுற்றுகளைத் தாண்டி அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என பங்களாதேஷ் எதிர்பார்க்கப்படாதபோதும், அனைத்து அணிகளுக்கும் கடும் சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் கடந்தகால வளர்ச்சிக்கு மஷ்ரபி மோர்தஸாவின் தலைமைத்துவத்துக்கும் பெரும் வகிபாகம் இருக்கின்ற நிலையில், அவருக்கு 36 வயதாகையில், பங்களாதேஷின் தூண்கள் எனப்படும் ஷகிப் அல் ஹஸன், முஷ்பிக்கூர் ரஹீம், தமிம் இக்பால், மகமதுல்லா ஆகியோர் இணைந்து விளையாடும் இறுதி உலகக் கிண்ணத் தொடராக இம்முறை உலகக் கிண்ணத் தொடரே அமையப் போகின்றது.
ஆக, அண்மைய கால உலகக் கிண்ணத் தொடர்களில் இம்முறையே பங்களாதேஷிடமிருந்து உச்ச கட்ட எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அந்தவகையில், இதைப் பூர்த்தி செய்வதற்கு, தமிம் இக்பாலோ அல்லது முஷ்பிக்கூர் ரஹீமினதோ அல்லது மகமதுல்லாவுடையதோ அல்லது இளம் வீரர்கள் லிட்டன் தாஸ், செளர்கார், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோரின் ஒற்றைப் பெறுபேறுகள் இல்லாமல் கூட்டாக தொடர்ச்சியான பெறுபேறுகளை இவர்களிடமிருந்து பங்களாதேஷ் பெற்றால், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் போன்ற அணிகள் தவிர இந்தியா போன்ற அணிகளையும் வெல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்திலுள்ள ஆடுகளங்கள் பெரும் ஓட்ட எண்ணிக்கை குவிப்புக்குச் சாதகமானதாகவே இருக்கும் எனக் கருதப்படுகின்ற நிலையில், முஸ்தபிசூர் ரஹ்மான் பங்களாதேஷுக்கு முக்கியமானவராகக் காணப்படுகின்றார். இதேவேளை, இங்கிலாந்து நிலைமைகள் ஸ்விங்குக்கு ஒத்துழைத்தால், மஷ்ரபி மோர்தஸாவுடன் இணைந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இன்னும் விளையாடியிருக்காத அபு ஜயேட் முக்கியமானவராகக் காணப்படுகின்றார்.
ஆரம்பத் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில், தனது ஆரம்ப காலங்களில் அதிரடியான ஆரம்பத் துடுப்பாட்டவீரராகவிருந்து தற்போது பொறுப்பான சிரேஷ்ட ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் காணப்படும் தமிம் இக்பால், நியூசிலாந்துக்கெதிரான தொடரில் பிரகாசிக்காதபோதும் உறுதியான ஆரம்பத்தை வழங்குவதற்கு அவரையே பங்களாதேஷ் தங்கியிருப்பதுடன், அதிரடியை இளம் வீரர் லிட்டன் தாஸ் அல்லது செளமியா சர்க்காரிடம் எதிர்பார்க்கின்றது.
லிட்டன் தாஸும், செளமியா சர்க்காரும் சிறந்த திறமையைக் கொண்டிருக்கின்றபோதும் களத்தில் தொடர்ச்சியான சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றனர். இவர்கள் தவிர, இனிங்ஸின் இறுதிப் பகுதியில் வேகமாக ஓட்டங்களைப் பெறுவதற்காக மஷ்ரபி மோர்தஸவால் அடையாளப்படுத்தப்பட்ட சபீர் ரஹ்மானும், குழாமில் மொஸடெக் ஹொஸைன் உள்ள நிலையில் தனதிடத்தை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதேவேளை, முஷ்பிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹஸன், மகமதுல்லா, மொஹமட் மிதுன் என பங்களாதேஷின் மத்தியவரிசை பலமானதாகவே காணப்படுகின்றது. எனினும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து ஸ்விங் ஆகும் சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பங்களாதேஷ் விக்கெட்டுகளை பறிகொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்ற நிலையில், இம்ருல் கைஸ் போன்ற நம்பிக்கையளிக்கும் சிரேஷ்ட வீரரை உலகக் கிண்ணக் குழாமில் சேர்க்காமை அபத்தமாகவே காணப்படுகின்றது.
ஆக, அவ்வாறான சந்தர்ப்பங்களில், முஷ்பிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹஸன், மகமதுல்லா போன்ற சிரேஷ்ட வீரர்களிலொருவரே அணியைத் தாங்க வேண்டும்.
சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மெஹிடி ஹஸன் சிறப்பாகச் செயற்படுகின்றபோதும், இங்கிலாந்தில் இருக்கும் என நம்பப்படுகின்ற தட்டையான ஆடுகளங்களில் அவரின் செயற்பாடு மிக மோசமானதாகக் காணப்படுகின்றது.
அந்தவகையி, ஷகிப் அல் ஹஸன், மகமதுல்லாவிடம் தேவையான சுழற்பந்துவீச்சைப் பெற முடியும் என்பதுடன், தேவைப்பட்டால் சபீர் ரஹ்மானையும் பயன்படுத்தலாம் என்ற நிலையில், மெஹிடி ஹஸனுக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது. எனினும், அணித்தெரிவுகளில் நேரடியாகத் தலையீடை மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவரின் செல்லப்பிள்ளை மெஹிடி ஹஸன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மஷ்ரபி மோர்தஸா, முஸ்தபிசூர் ரஹ்மானோடு, பந்து ஸ்விங்காகும் ஆடுகளங்களில் அபு ஜயெட்டும், தட்டையான ஆடுகளங்களில் ருபெல் ஹொஸைனோடு, சகலதுறைவீரரான மொஹமட் சைஃபுடீனோடு பங்களாதேஷ் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலண்டனில் இலங்கை நேரப்படு அடுத்த மாதம் இரண்டாம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்காவுடனான போட்டியுடன் இம்முறை உலகக் கிண்ணத் தொடரை பங்களாதேஷ் ஆரம்பிக்கின்றது.
35 minute ago
42 minute ago
51 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
51 minute ago
52 minute ago