2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஒலிம்பிக்குள் ஒளிந்திருக்கிறதா?

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 15 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முருகவேல் சண்முகன்

shanmugan10@gmail.com

 

உலகமே கொரோனா பரவலை இன்னும் கட்டுப்படுத்துவதில் வெற்றியடையாத நிலையில், ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.   

கடந்தாண்டு நடைபெறவிருந்த போட்டிகள், கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இம்மாதம் முதலாம் திகதி முதல், சர்வதேச தடகள வீரர்கள் டோக்கியோவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.   

அவுஸ்திரேலிய பெண்கள் சொஃப்ட்போல் அணியே, முதலாவது சர்வதேச தடகள வீரர்களாக டோக்கியோவுக்கு, இம்மாதம் முதலாம் திகதி சென்றடைந்திருந்தது.   
இந்நிலையில், ஜப்பானானது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புடன் போராடுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

டோக்கியோ உட்பட, ஜப்பானின் பெரும்பாலான பகுதிகள், இம்மாதம் 20ஆம் திகதி வரையில் அவசரகால நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் உப தலைவர் ஜோன் கோட்ஸ், கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.   

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போதும், ஒலிம்பிக்கை மீண்டும் ஒத்தி வைப்பதற்கு அல்லது முற்றாக இரத்துச் செய்வதற்கு ஆதரவாகவே, 60 சதவீதமானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   

இந்நிலையில், கடந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டதன் மூலம், மேலதிகமாக 3.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவான நிலையில், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இல்லாமல், இம்முறை போட்டிகள் இடம்பெறும் என்றே கருதப்படுகிறது.   

எவ்வாறாயினும், ஜப்பானியப் பார்வையாளர்கள், ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து, அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஏனெனில், கூச்சலிடும்போது, கட்டி அணைக்கும்போது, கையையும் கையையும் தட்டும்போது, கொரோனா பரவும் என எச்சரிக்கப்படுகிறது.   

இந்நிலையில், பொதுமக்களின் அதிகரித்த நடமாட்டத்தால், கடந்த காலங்களில் கொரோனா தொற்றுகள் அதிகரித்த நிலையில், ஒலிம்பிக்கின்போது அதிகரித்த நடமாட்டமே, பாரிய ஆபத்து என ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதான மருத்துவ ஆலோசகர் ஷிகெரு ஒமி தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகளுக்கு, 15.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனக் கருதப்படுகின்ற நிலையில், வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி முடிப்பது, ஜப்பானியப் பிரதமர் யொஷிஹிடே சுகா, தனது பதவியைத் தக்க வைப்பதற்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது.   

ஏனெனில், இவ்வாண்டு பொதுத் தேர்தல் ஒன்றையும் ஆளுங்கட்சி தலைமைத்துவப் போட்டி ஒன்றையும் பிரதமர் சுகா எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில், ஜப்பானின் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதானது, மெதுவாகக் காணப்படுகின்ற நிலையில், தடுப்பு மருந்தேற்றல் வேகமெடுக்கும்போது, போட்டிகளை நடத்துவதற்கான பொதுமக்களின் ஆதரவு அதிகரிக்குமென, ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் மசஹிகோ ஷிபயமா தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆட்கள் வரவுள்ள நிலையில், வெவ்வேறு இடங்களிலிருந்தும் வரும் வெவ்வேறு கொரோனா மாறிகளிலிருந்து, புதிய மாறி உருவாகுவதை மறுக்க முடியாது என, ஜப்பானிய வைத்தியர் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.   

மிகவும் பாதுகாப்பான ஏற்பாடுகளோடு இடம்பெற்ற பாகிஸ்தானின் உள்ளூர் இருபத்துக்கு - 20 தொடரான ‘பாகிஸ்தான் சுப்பர் லீக்’ (பி.எஸ்.எல்), இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான ‘இந்தியன் பிறீமியர் லீக்’ (ஐ.பி.எல்) என்பன கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ன.    

அதுவும், குறித்த தொடர்களின் ‘பயோ பபிள்’களுக்கு உள்ளேயே, கொரோனா தொற்று ஏற்பட்டு, இத்தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது இத்தொடர்கள், ‘துரும்பு’ என்ற நிலையில், ஒலிம்பிக் ஆரம்பித்து, இவ்வாறு இடம்பெறுவதற்கான பல சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.   

இதேவேளை, ஒலிம்பிக்கை நடத்தும் டோக்கியோவுடனான ஒப்பந்தத்தில், சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவுக்கு மாத்திரமே ஒலிம்பிக்கை இரத்துச் செய்யும் அதிகாரம் காணப்படுகின்றது.   

அந்தவகையில், தமிழ்த் திரைப்பட வசனம் போல “உனக்கு வந்தா இரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னி” என்பது போல, கொரோனாவால் நேரடியான தாக்கம் ஏற்படும் வரைக்கும், ஒலிம்பிக் செயற்குழுவும், ஜப்பானிய மேலதிகாரிகளும் ஒலிம்பிக்கை நடத்துவதில் உறுதியாகவே இருப்பார்கள்.   

ஆயினும், சாதாரண ஜப்பானிய மக்களின் பிரதிபலிப்பானது, இதுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. கொரோனாவால் உயிரிழப்புகளைச் சந்தித்தோரின் குடும்பங்களின் இப்பிரதிபலிப்பு, மிக உணர்வுபூர்வமாகனதாகக்  காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.   

ஆக, இத்தகைய மக்களின் ஆவேசங்களுக்கு மத்தியிலும் வருவாய் இழப்பையே, ஒலிம்பிக் செயற்குழு கருதுமென்றால் இது மோசமான எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.   

மறுபக்கமாக, ஒலிம்பிக்கானது நான்காண்டுகளுக்கு ஒரு முறையே இடம்பெறுவதுடன், தற்போது ஓராண்டு பிற்போடப்பட்டுள்ள நிலையில் தடகள வீரர்கள், ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போகலாம் என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.   

அடுத்து, தற்கால கட்டத்தில் அழுதத்தில் இருக்கும் மக்களுக்கு, ஒலிம்பிக் போன்றதொரு போட்டி இடம்பெறுகையில், அதை தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள், தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படலாம்.   

இருந்தபோதும், கொரோனா மாறிகள் உருவெடுத்து, உயிருக்கு ஆபத்தாகும் நிலையில் தொழில், திறமை, வருமானம் எதையும் தாண்டி, இக்கொரோனா காலத்தை உயிருடன் தாண்டுவதே முதன்மையானதாக இருக்கின்றது.   

எனவே, ஒலிம்பிக் வரலாற்றில், இதற்கு முன்னரும் ஒலிம்பிக்குகள் இரத்துச் செய்யப்பட்டடன. இருந்தபோதும், இம்முறையே முதல் தடவையாக ஒத்தி வைக்கப்பட்டது. இதுபோலவே, மீண்டுமொரு தடவை ஒத்தி வைப்பதே சாலச் சிறந்தது.    

இல்லாவிடின், இன்னும் ஒரு மாதத்தில் ஒலிம்பிக் மாறியால் மோசமான பாதிப்புகள் என்ற செய்தியை, நீங்கள் வாசிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X