Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா பரவலுக்குள் சந்தேகத்துக்கிடமானதாக டோக்கியோ 2020 ஒலிம்பிக்கானது ஒருவாறாக எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.
இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கும் வரையிலேயே சந்தேகங்கள் நிலவியபோதும், அது ஆரம்பித்தவுடன் உலகத்தை அதனுடன் கட்டிப்போட வைத்து விட்டது. இக்கொரோனா பரவல் காலத்தில் இது ஒரு நல்ல மாற்றமாக இருந்தது.
அந்தவகையில், இப்பத்தியானது இந்த ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், கண்கலங்க வைத்த நிகழ்வுகள், சாதனைகளை நோக்குகிறது.
முதலாவதாக ஒலிம்பிக் ஆரம்பிப்பதற்கு முன்னரே முழு உலகத்தாலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சிமோன் பைல்ஸின் போட்டியிலிருந்து விலகல் முடிவானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதலில் சறுக்கியிருந்த பைல்ஸ் பின்னர் சுதாகரித்துக் கொண்டு அனைத்து தனிநபர் குழு ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில், முதலாவது குழுநிலைப் போட்டியிலேயே இடைநடுவிலேயே விலகியிருந்த பைல்ஸ், மன அழுத்தம் காரணமாக ஒவ்வொன்றாக தனிநபர் போட்டிகளிலிருந்து விலகி இறுதியாக ஒரு தனிநபர் போட்டியிலேயே பங்கேற்றிருந்தார்.
இவ்விடயமானது ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், இனிவரும் காலங்களில் தனிநபர் உளநலப் பிரச்சினைகளை முக்கியமாகக் கையாள வேண்டும் என உணர்த்தியிருந்தது.
இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான உலக சாதனைக்குச் சொந்தக்காரரான தென்னாபிரிக்காவின் வான் நிக்கரெக், அரையிறுதிப் போட்டிகளுடனேயே விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழங்கால் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பின்னர் அவரது பெறுபேறுகள் முன்னரைப் போல இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம் இவ்வாறாக இருக்க தடகளப் போட்டிகள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து கட்டாரின் முட்டாஸ் எஸ்ஸா பார்ஷிம்மின் செய்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பார்ஷிம்மும், இத்தாலியின் ஜியன்மார்கோ தம்பேரியும் ஒரேயளவு உயரத்தையே பாய்ந்திருந்த நிலையில், இரண்டு பேரும் தங்கப் பதக்கங்களைக் கொண்டிருக்கலாமா என பார்ஷிம் வினவிய நிலையில், அதற்கு அதிகாரிகளும் இணங்கியிருந்த நிலையில் இருவரும் தங்கப் பதக்கங்களை பகிர்ந்திருந்தனர்.
இதேவேளை, ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டலில் தங்கப் பதக்கத்தை வென்ற ஜமைக்காவின் ஹன்ஸ்லே பார்ஷ்மென்ட்டின் செய்கை நன்றியறிதலை உணர்த்தியிருந்தது.
இந்த ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டலின் அரையிறுதிப் போட்டிக்கு செல்லாமல் மாறி நீச்சல் தடாகத்துக்கு பார்ஷ்மென்ட் சென்ற நிலையில், அவர் தனது போட்டியிடத்துக்குச் செல்ல தன்னார்வலப் பணியாளர் ஒருவரே பணம் கொடுக்க வாடகைக் காரில் சென்றிருந்தார்.
இந்நிலையில், போட்டி முடிவடைந்த பின்னர் அந்த தன்னார்வலப் பணியாளரை தேடிப் பிடித்த பார்ஷ்மென்ட், அப்பணத்தை மீளக் கொடுத்ததுடன், தனது தங்கப் பதக்கத்தைக் காட்டி நன்றியைச் செலுத்தியிருந்தார். இவ்விடயமும் ஒலிம்பிக்கோடு பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.
இதேவேளை, ஒலிம்பிக்கில் அதிகம் கவனிக்கப்படும் போட்டிகளாக பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில், தான் றியோ 2016-இல் வென்றதை ஜமைக்காவின் எலைனி தொம்ஸன் ஹெரா தக்க வைத்திருந்தார்.
இந்நிலையில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இத்தாலியின் லமொன்ட் மார்செல் ஜேக்கப்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கனடாவின் அன்ட்ரே டி கிராஸ் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இதுதவிர, சாதனைகளாக தடகளத்தில் பெண்களுக்கான முப்பாய்தலில் 15.67 மீற்றர் தூரம் பாய்ந்து உலக சாதனையை வெனிசுவேலாவின் யுலிமார் றோஜாஸ் நிகழ்த்திருந்தார்.
பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில், போட்டித் தூரத்தை 51.46 செக்கன்களில் கடந்து, தனது உலக சாதனையை ஐக்கிய அமெரிக்காவின் சிட்னி மக்லொலின் முறியடித்திருந்தார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலிலும் போட்டித் தூரத்தை 45.94 செக்கன்களில் கடந்த நோர்வேயின் கார்ஸ்டன் வார்ஹொல்ம், தனது உலக சாதனையை முறியடித்திருந்தார்.
இதேவேளை, ஒலிம்பிக்கில் வெற்றிகரமான வீரராக ஐக்கிய அமெரிக்காவின் நீச்சல்வீரரான கலெப் றஸல் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான எம்மா மக்கியோன் நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தார்.
இந்நிலையில், ஆண்களுக்கான 4*100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இத்தாலி தங்கப் பதக்கம் வென்றதுடன், பெண்களில் ஜமைக்கா தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
இதேவேளை, பெண்களுக்கான, ஆண்களுக்கான 4*400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஐ. அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
இந்நிலையில், அயல் நாடான இந்தியாவானது தடகளத்தில் தெற்காசிய நாடு ஒன்று பெறும் முதல் தங்கப் பதக்கமாக, நீரஜ் சோப்ரா மூலம் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
26 minute ago
33 minute ago
42 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
42 minute ago
43 minute ago