2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

விளையாட்டில் 2019-இன் நாயகர்கள்

Shanmugan Murugavel   / 2020 ஜனவரி 01 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபத்து ஓராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தமானது நேற்றுடன் முடிவடைந்து இன்று 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பிக்கையில், விளையாட்டில் கடந்தாண்டில் பிரகாசித்த நாயகர்களை இக்கட்டுரை நோக்குகிறது.

அந்தவகையில் பார்க்கப்போனால் அனைத்து விளையாட்டுக்களின் நாயகர்களையும் இந்த ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்குவது கடினமானதென்ற நிலையில், கிரிக்கெட், கால்பந்தாட்டம், டென்னிஸ், தடகளம், போர்மியுலா வண்ணின் நாயகர்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டே எமது தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் சுதேசிய விளையாட்டுக்களை விட அதிகம் பேரை தன்னை நோக்கி ஈர்த்த விளையாட்டாக இருக்கின்ற நிலையில் அதிலிருந்து கடந்தாண்டின் நாயகர்களை ஆரம்பிப்போம்.

அந்தவகையில், கடந்தாண்டைப் பொறுத்தவரையில் இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சத்துக்கு அப்பால், தனது கடுமையான பயிற்சியின் விளைவாக மூன்று வகைப் போட்டிகளிலும் பெறுபேறுகளை வெளிப்படுத்தி தனது நாயக அந்தஸ்தை தொடர்ந்தும் தக்க வைப்பவராக இந்திய அணியின் தலைவர் விராட் கோலியே காணப்படுகின்றார்.

கடந்தாண்டில் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 68 என்ற சராசரியில் 612 ஓட்டங்களைப் பெற்றுள்ள விராட் கோலி, 26 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 59.86 என்ற சராசரியில் 1,377 ஓட்டங்களைக் குவித்ததுடன், 10 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 77.66 என்ற சராசரியில் 466 ஓட்டங்களைக் குவித்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுவதுடன், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 10ஆம் இடத்தில் காணப்படுகிறார்.

எவ்வாறெனினும், கடந்தாண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியமை விராட் கோலியின் தாழ்வுப் புள்ளியாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டில் எட்டு டெஸ்ட்களில் விளையாடி 74.23 என்ற சராசரியில் 965 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட்களில் விராட் கோலியை மேம்பட்டிருந்ததுடன், கடந்தாண்டில் 28 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 57.30 என்ற சராசரியில் 1,490 ஓட்டங்களைப் பெற்று விராட் கோலியின் சக ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மா அவரை நெருங்குகின்றபோதும், ஒட்டுமொத்த போட்டிகள் என வரும்போது விராட் கோலியே மேம்பட்டு நிற்கின்றார்.

உண்மையில் விராட் கோலியின் நாயக அந்தஸ்துக்கு கிரிக்கெட்டில் கடந்தாண்டு சவாலளிக்ககூடியவராக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸே விளங்கியிருந்தார்.

கடந்தாண்டு 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 20.13 என்ற சராசரியில் 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பற் கமின்ஸ், 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 21.61 என்ற சராசரியில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்திலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றார்.

இவ்வாறாக கிரிக்கெட்டின் நாயகர்கள் இருக்க, கடந்தாண்டு ஆரம்பத்தில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் வைத்து இந்தியா டெஸ்ட் தொடரை வென்றமை, தென்னாபிரிக்காவில் வைத்து இலங்கை டெஸ்ட் தொடரை வென்றமை, உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றியமை, இங்கிலாந்தில் வைத்து ஆஷஸை அவுஸ்திரேலியா தக்க வைத்தமை ஆகியன கடந்தாண்டின் முக்கிய கிரிக்கெட் பதிவுகளாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இவ்வாண்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆண்கள் கிரிக்கெட்டளவுக்கு பெண்கள் கிரிக்கெட்டானது இன்னும் ஊடக வெளிச்சத்தைப் பெறாதபோதும், கடந்தாண்டுகளில் அதன் ஊடகப் பரப்பானது அதிகரித்தே வந்திருந்த நிலையில், கடந்தாண்டில் கிரிக்கெட்டின் நாயகியாக அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீராங்கனை எலைஸ் பெரியே விளங்குகின்றார்.

கடந்தாண்டில் நடைபெற்ற ஆஷஸ் ஒற்றை டெஸ்ட் போட்டியில் 192 ஓட்டங்களைப் பெற்றிருந்த எலைஸ் பெரி, கடந்தாண்டில் 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 73.50 என்ற சராசரியில் 441 ஓட்டங்களைப் பெற்றதுடன், 13.52 என்ற சராசரியில் 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த வீராங்கனை, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாகத் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், எலைஸ் பெரியின் கடந்தாண்டின் நாயகி அந்தஸ்துக்கு கடும் போட்டியை வழங்கியவராக அவரின் சக அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளரான அலைஸா ஹீலி காணப்பட்டிருந்தார்.

கடந்தாண்டு ஒன்பது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 53.14 என்ற சராசரியில் 372 ஓட்டங்களைப் பெற்ற அலைஸா ஹீலி, 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 60.81 என்ற சராசரியில் 669 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பெண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்கதாக இவ்வாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக எமது பிரதேசங்களில் பரவலாக இரசிகர்களால் விரும்பப்படும் கிரிக்கெட் கடந்தாண்டு இருக்கையில், அடிமட்டங்களிலிருந்து கொண்டாடப்படும் கால்பந்தாட்டமானது ஜாம்பவானான ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகத்தினதும், ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரும், அணித்தலைவருமான லியனல் மெஸ்ஸிக்கு மேலும் மகுடத்தை அளித்த ஆண்டாக கடந்தாண்டு விளங்கியிருந்தது.

அந்தவகையில், கடந்தாண்டு 58 போட்டிகளில் விளையாடி 50 கோல்களைப் பெற்றிருந்த லியனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரருக்கான பலூன் டோர் விருதையும் வென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்தாண்டில் 58 போட்டிகளில் விளையாடி 54 கோல்களை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சினதும், போலந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரும் அணித்தலைவருமான றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்தபோதும், லியனல் மெஸ்ஸியின் கோல்கள் பார்சிலோனவின் வெற்றிகளுக்கு கூடிய பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், 10க்கும் மேற்பட்ட கோல்கள் பெறப்படுவதற்கும், பல கோல்கள் உருவாக்கப்படுவதற்கும் லியனல் மெஸ்ஸி உதவியிருந்தார்.

ஆண்களின் கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரைக்கும் லியனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவைச் சுற்றியே கதாநாயக அந்தஸ்து பின்னப்பட்டிருந்த நிலையில், கடந்தாண்டு பெண்கள் கால்பந்தாட்ட அரங்கில் அவ்வாறானதொரு நட்சத்திர அந்தஸ்தை, ஐக்கிய அமெரிக்க சர்வதேச கால்பந்தாட்ட அணியின் இணைத் தலைவரும் முன்களவீராங்கனையுமான மேகன் றபினோ பெற்றிருந்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி, ஆறு கோல்களைப் பெற்றதோடு, மூன்று கோல்கள் பெறப்படுவதற்கு உதவிய மேகன் றபினோ, உலகக் கிண்ணத்தை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றுவதற்கு உதவியது மட்டுமல்லாமல், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கடந்தாண்டின் சிறந்த வீராங்கனையாகவும், பலூன் டோரின் கடந்தாண்டின் சிறந்த வீராங்கனைக்காக பரிசையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், டென்னிஸ் உலகைப் பொறுத்தவரையில், உலகின் இரண்டாம்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சிடமிருந்து போட்டியை எதிர்கொண்டிருந்தபோதும், ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடர், பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரைக் கைப்பற்றியதுடன், அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஸ்பெய்னின் ரஃபேல் நடால், உலகின் முதல்நிலைவீரரான கடந்தாண்டை முடித்து தனது கதாநாயக அந்தஸ்தை மீண்டுமொரு முறை நிலைநாட்டியிருந்தார்.

அவுஸ்திரேலியப் பகிரங்கத் தொடர், விம்பிள்டனைக் கைப்பற்றிய நொவக் ஜோக்கோவிச்சே அதிகபட்சமாக ஐந்து தொடர்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், ஆண்கள் டென்னிஸானது ரபேல் நடால், நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர் போன்ற சிரேஷ்ட வீரர்களை மீண்டும் மய்யப்படுத்தி இருந்த நிலையில், பெண்கள் டென்னிஸானது 23 வயதான இளம் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியை நட்சத்திர அந்தஸ்துக்கு கடந்தாண்டு உயர்த்தியிருந்தது.

கடந்தாண்டை உலகின் முதல்நிலை வீராங்கனையாக முடித்துக் கொண்ட அஷ்லெய் பார்ட்டி, பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் கடந்தாண்டு அதிகபட்சமாக நான்கு தொடர்களையும் வென்றிருந்தார்.

இந்நிலையில், அஷ்லெய் பார்ட்டிக்கு சவால் விடுக்கக்கூடியவர்களாக, அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரைக் கைப்பற்றிய 22 வயதான ஜப்பானின் இளம் வீராங்கனையான நயோமி ஒஸாகா, ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரைக் கைப்பற்றிய 19 வயதான பியங்கா அன்ட்றீச்சு ஆகியோர் காணப்பட்டிருந்தனர்.

தடகளத்தைப் பொறுத்தவரையில் இவ்வாண்டு ஒலிம்பிக் நடைபெறவுள்ள நிலையில் முக்கியமானதாக இவ்வாண்டு கருதப்படுகையில் அதற்கான முன்னோட்டமாக கடந்தாண்டு நடைபெற்ற தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் உலகத் தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் விளங்கியிருந்தன.

அந்தவகையில், உலகின் அதிவேகமான மனிதனாக இருக்கும் ஜமைக்காவின் உசைன் போல்டின் இடத்துக்கான போட்டியில், குறித்த தடகள சம்பியன்ஷிப்பின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று ஐக்கிய அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மன் தனது பெயரைப் பதிந்து கடந்தாண்டில் தடகளத்தில் பிரகாசித்த நட்சத்திரமாக தனது பெயரை சேர்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், மறுப்பக்கமாக குறித்த சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற ஜமைக்காவின் ஷெலி-ஆன் பிறேஸர் பிறைஸ், தாய்மையின் பின்னர் தனது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெற்றுக் கொண்டார். ஒலிம்பிக்கில் 100, 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் போட்டியிட எதிர்பார்க்கும் இவர் பிரித்தானியாவின் டினா ஆஷர்-ஸ்மித்திடமிருந்து போட்டியை எதிர்கொள்கின்றார்.

இதேவேளை, போர்மியுலா வண் சம்பியஷிப்பைப் பொறுத்த வரையில் நடப்புச் சம்பியனான மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமிடன், கடந்தாண்டின் 21 பந்தயங்களில் 11 பந்தயங்களில் வென்று தனது சம்பியன் பட்டத்தை மீளவும் தக்க வைத்து போர்மியுலா வண்ணின் ஜாம்பவான் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

கடந்தாண்டில், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், பெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் ஆகியோரிடமிருந்து சவால்களை எதிர்கொண்டிருந்த லூயிஸ் ஹமில்டன், போர்மியுலா வண்ணில் அதிக பட்டங்களைக் கைப்பற்றிய ஜேர்மனிய ஓட்டுநரான மைக்கல் ஷுமாக்கரின் ஏழு பட்டங்கள் சாதனையைச் சமப்படுத்துவதற்கு மேலுமொரு பட்டத்தையே பெற வேண்டும் என்ற நிலையில் இவ்வாண்டும் போர்மியுலா வண்ணில் சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X