Editorial / 2025 ஜூலை 11 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வடக்கு மாகாணத்தில் இருந்து வவுனியா தெற்கு வலயத்தில் கற்பிக்கும் 70 ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் வவுனியா தெற்கு வலய செயலாளர் கி.வசந்தரூபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு வலயத்தின் ஆசிரியர் இடமாற்ற சபை கூட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் வெள்ளிக்கிழமை (11) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதற்கான இடமாற்றம் சம்பந்தமாக இடமாற்ற சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து சிங்கள மொழி ஆசிரியர்கள் 52 பேரும், தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் 18 பேரும் மாகாணத்தை விட்டு வேறு மாகாணங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் மாகாண இடமாற்ற சபை ஊடாக விரைவில் பரிசீலிக்கப்பட உள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தின் வலயங்களுக்கு இடையில் இடமாற்றம் பெறுவதற்கு வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 22 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும், ஒரு சிங்கள மொழி மூல ஆசிரியருமாக 23 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதை வவுனியா தெற்கு வலய இடமாற்ற சபை பரிசீலனைக்கு எடுத்துக் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இத் தீர்மானங்கள் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி முடிவுகள் வலய இடமாற்ற சபை தீர்மானத்தையும் கருத்தில் கொண்டு மாகாண இடமாற்ற சபையால் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அது தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படவுள்ளன. வலயத்திற்கு உட்பட்ட இடமாற்ற சபை விரைவில் கூட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மாவட்டத்தில் காணப்பட்ட ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட போதிலும், நியமன நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்யாது வலயத்தை விட்டு வெளியேற பல ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இருப்பினும் வடமாகாண ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைய ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் நலனை கருத்தில் கொண்டே இடமாற்ற சபையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கான இட மாற்றங்களின் போது அவர்கள் இலகுவாகவும், வினைத்திறனுடனும், விருப்பத்துடனும் சென்று கற்பிக்கக் கூடிய வகையில் இடமாற்றங்கள் இடம் பெற வேண்டும். அதன் மூலமே வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் வடக்கு மாகாணம் 9 ஆவது நிலையில் உள்ளது. அதற்கு ஆசிரியர் வளப் பங்கீடுகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படாமையும் ஒரு காரணம் என்பதை மறுத்து விட முடியாது எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .