2021 மே 08, சனிக்கிழமை

அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து போராட்டம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து தேசிய காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ், இன்று வெள்ளிக்க்கிழமை (20) தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டத்தில் மக்களின் நலன்கள், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேர்தல் காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அத்தியவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில பொருட்களின் விலைகள் வெளிப்படையாக அதிகரிக்கப்பட்டமைக்கு அரசாங்கம் கூறியுள்ள காரணங்கள் நொண்டிச் சாட்டுகளாகவே உள்ளன.

அரிசி, பருப்பு மற்றும் வெங்காயம் என அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இரவோடு இரவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தீட்டிய சதித்திட்டமாகவே மக்கள் இதனை நோக்குகின்றனர்.

இன்று உலகில் மசகு எண்ணெய்யின் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில் பெற்றோல் ஒரு லீற்றருக்கு 100 வீத வரி விதித்¬தாலும் 82.30 ரூபாய்க்கு அரசாங்கத்தினால் வழங்க முடியும். அதனை நடைமுறைப்படுத்துவதாக கூறிய அரசாங்கம் தேர்தல் கால கட்டுக் கதையாகவே மறந்துபோனது. 

பெற்றோல், டீசல் விலை ஏறினால் உடனடியாக பொருட்களின் விலையை அதிகரிப்பார்கள் கடந்த வருடத்தில் பெற்றோல் விலை 42 ரூபாவால் குறைவடைந்திருந்த போதிலும் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இது அரசாங்கத்தின் மந்த நிலையை எடுத்துக் காட்டுகிறது. 

மக்களின் சேமிப்புகளை கறையான் அரிப்பது போன்று அழித்துவிடக் கூடிய ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி விழிப்புணர்வு போராட்டத்தை தேசிய காங்கிரஸ் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X