2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்துக்களில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி

Super User   / 2011 நவம்பர் 20 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட, எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த 2010 ஆம் ஆண்டு 65 வீதி விபத்துக்கள் இடம்பெற்றன. ஆனால் - இவ்வருடம் நிறைவடைவதற்குள் 87 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் 07 பேர் மரணமடைந்தனர். இந்த விபத்துக்களுக்கெல்லாம் பிரதான காரணம் - வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாமையே என்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.ஜே. சலாம் தெரிவித்தார்.

வீதி விபத்துக்களில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் தேசிய நிகழ்வினையொட்டி
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிழக்வொன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொறுப்பதிகாரி சலாம் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்ளூ

'வீதி ஒழுங்கைப் பின்பற்றினால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவது கணிசமான அளவு குறைவடையும். குறிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிவதால் வீதி விபத்தின் போது பாரதூரமான காயங்கள் ஏற்படாமல் தப்பிக்க முடியும்.

தயவு செய்து வேகமாக வாகனங்களைச் செலுத்தாதீர்கள். வேகம் - அதிக சேதத்தினை ஏற்படுத்தக் கூடியது. கடந்த வருடம் 65 வீதி விபத்துக்கள் ஏற்பட்டன. இவ்வருடம் நிறைவடைவதற்குள் 87 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த 87 விபத்துக்களிலும் 07 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள். ஒருவர் தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்.

வீதியில் செல்லும் எல்லோரும் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் பிழைகள் கூட நம்மைப் பாதிக்கும். எனவே, வீதிகளில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருங்கள்' என்றார்.

மேற்படி நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ, ஐ.எல். மனாப், அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தின் சிவில் நிருவாக பொறுப்பதிகாரி எம்.ஐ. அப்துல்லா, போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் சார்ஜன் ஜே. திவகலாலா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஜே. ஜானக சம்பத் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியாக விபத்துக்களில் மரணித்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  கல்முனை நகரில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்காக இன்று காலை 10.05 மணிக்கு  வீதியில் பயணித்த சகல வாகனங்களும் நிறுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .