2021 மே 06, வியாழக்கிழமை

மு.கா. இந்த அரசாங்கத்திலிருந்தும் நன்மையில்லை: பதில் தவிசாளர்

Super User   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - இந்த அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தும், எதிர்க்கட்சி போலவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கட்சிக்காக வாக்களித்தவர்களுக்கு இந்த ஆட்சியில் எதுவும் நன்மைகள் இல்லை என்கிற போது – தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் சரியானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், இந்த ஆட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டாம் என்று கட்சித் தொண்டர்கள் கூறுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியில் தனிப்பட்ட சில நபர்கள் பதவிகளை அனுபவிப்பதற்காக இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணையவில்லை என அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பயிலுநர் பட்டதாரிகளாக பணியாற்றுவோருக்கான நியமனத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடுகளுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எம்.ஏ. அன்சில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பயிலுநர் பட்டதாரிகளாக பணியாற்றுவோருக்கான நியமனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் தலையீடுகள் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும். பொருத்தமான பயிலுநர்கள் அவர்களுக்குத் தகுதியான திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளின் கீழ் இணைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் - இப்பகுதியிலுள்ள மாகாண அமைச்சர் ஒருவரின் கைப்பொம்மை போல் செயற்படுவதன் காரணமாகவே பயிலுநர் பட்டதாரிகளின் நியமன விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் மலிந்து போயுள்ளன.

இங்குள்ள மாகாண அமைச்சருக்கு கூஜா தூக்கியவர்களுக்கு பட்டதாரி நியமனங்களின் போது முன்னுரிமை வழங்கப்படுகிறது. பட்டதாரி நியமனங்களின்போது, முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்தார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக தகுதியுடைய பல பயிலுநர் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளர்.

இவ்வாறு, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர் ஆகியோரிடம் முறையிட்டும் இதுவரை ஆக்கபூர்மாக எதுவும் நடக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக இருந்தும், எதிர்க்கட்சி போலவே நடத்தப்பட்டு வருகிறது. எமது கட்சிக்காரர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கெல்லாம் சரியானதொரு முடிவினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், இந்த ஆட்சியில் தொடர்ந்து இருக்கத் தேவையில்லை என்று கட்சித் தொண்டர்கள் கூறுகின்றார்கள். கட்சியில் தனிப்பட்ட சில நபர்கள் பதவிகளை அனுபவிப்பதற்காக இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணையவில்லை.

இந்தக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு இந்த ஆட்சியில் எதுவும் நன்மைகள் நடக்காத போது – தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 80 வீதத்துக்கும் அதிகமான ஆதரவு இருக்கின்றது. ஆனால், இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராக வேறொரு கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அதாஉல்லாவை அரசாங்கம் நியமித்திருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்துடன் மு.காங்கிரஸ் இணையும் போது இந்த விடயம் மிக முக்கியமானதாகப் பேசப்பட்டது. முஸ்லிம் காங்கிகு பெரும்பான்மை ஆதரவுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின்  உயர் மட்டக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவதாக எமது கட்சித் தலைமையும் எமக்குக் கூறியது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு -  காங்கிரஸ் ஆதரவு வழங்கியபோது, ஆட்சியாளர்களுக்கும் மு.காவுக்குமிடையில் எழுத்து மூலமான ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக மு.கா. தலைமை எமக்கு அறிவித்தது.

அதாவது, கிழக்கு மாகாணத்தில் நிருவாக நீதியாக நாம் எதிர்நோக்கும் சிக்கல்களை அரசு தீர்த்து வைக்கும் என்றும், எமது அபிலாசைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளதாக எமக்குக் கூறினார்கள்.

ஆனால், நிருவாக ரீதியாக நாம் எதிர்நோக்கிவரும் எந்தவிதமான பிரச்சினைகளும் இதுவரை தீர்க்கப்படவில்லை. அப்படியென்றால் இந்த அரசை நாம் எப்படி தொடர்ந்தும் நம்புவது என்கிற கேள்வி இங்கு எழுகிறது.

மக்களினதும், கட்சித் தொண்டர்களினதும் நாளாந்தப் பிரச்சினைகளை கட்சியின் அடமட்ட அரசியல்வாதிகளான நாங்கள்தான் மிக நன்றாக அறிவோம். மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு சென்ற – கட்சியின் உயர்மட்டத்தவர்கள் இந்த மக்களின் பிரச்சினைகளில் தலையிடாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்" என்றார்.

இந்த  ஊடகவியலாளர் சந்திப்பில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ. அமானுல்லா, எஸ்.எல். முனாஸ், ஐ.எல். முனாப், என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0

 • Sifaniya Sunday, 09 December 2012 08:35 AM

  நல்ல கருத்து.
  பயனற்ற பலம்; பலனற்றுப்போகும்.......!!!!!!!!

  Reply : 0       0

  kiyas Sunday, 09 December 2012 09:41 AM

  இந்த நட்டில் அரைகுறை அரசியல்வாதிகள் இருக்கும் வரை உங்களால் ஒன்றும் பண்ணமுடியாது. மக்கள் ஆதரவு இல்லாத அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள். மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதுதான் இப்போதுல்ல அரசியல். நீங்கள் உங்கள் முடிவை எடுங்கள்.

  Reply : 0       0

  Kanavaan Sunday, 09 December 2012 03:45 PM

  தம்பி அன்சில், தனிப்பட்ட சிலர் பதவிகளையும், சொகுசுகளையும் அனுபவிக்கத்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தது என்ற விடயம் உங்களுக்கு இதுவரையில் புரியாமல் இருப்பது அதிசயமான விடயம்தான். அரசை விட்டு விலகித்தான் என்ன செய்ய, தற்போது கிடைத்துக் கொண்டிருப்பது கூட கிடைக்காமல் விடமாட்டாதா என்ன? சலுகை தேவையில்லை, உரிமை தேவையில்லை எங்களுக்குப் பதவிகளும், சொகுசுகளும்தான் தேவை. இது தெரியவில்லையா உங்களுக்கு? பாவம் அன்சில்.

  Reply : 0       0

  San Monday, 10 December 2012 10:11 AM

  அப்போ, அவரின் கருத்துப்படி அரசோடு இருந்தால்தான் நன்மை, எதிர்க்கட்சிக்காரர் எல்லாம் மண்ணைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டுமோ?

  Reply : 0       0

  jabbar Tuesday, 11 December 2012 07:36 AM

  காசிருந்தால் வாங்கலாம் ஐயொ பாவம்............

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .