2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக நெல் அறுவடை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அறுவடை செய்யப்பட்ட நெல்லினை விற்பனை செய்வதிலும் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை முகம் கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரெனப் பெய்ய ஆரம்பித்த மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லினை வீடு கொண்டு செல்ல முடியாத விவசாயிகள், அவற்றினை வீதியோரங்களில் குவித்து - மூடி விட்டுச் சென்றமைக் காணக் கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், விவசாயிகள் தமது நெல்லினைச் சந்தைப்படுத்துவதிலும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நெற்சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக நாடு பூராகவும் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கு தயாராக உள்ள போதும், மழையில் நனைந்த நெல்லினை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நெற் சந்தைப்படுத்தும் சபையினர் 14 வீதத்துக்கும் குறைவான ஈரப்பதனைக் கொண்ட நெல்லினையே கொள்வனவு செய்து வருகின்றனர். ஆனால், மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதன் - நெற்சந்தைப் படுத்தும் சபையினரின் நியம அளவிலும் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையினைப் பயன்படுத்தி தனியார் நெல் கொள்வனவாளர்கள் விவசாயிகளிடமிருந்து அடிமட்ட விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

நெற் சந்தைப்படுத்தும் சபையினர் ஒரு கிலோ சம்பா நெல்லினை 35 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாடு நெல்லினை 32 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவதாக அறிவித்துள்ளனர். ஆயினும், தனியார் நெல் கொள்வனவாளர்கள் ஒரு கிலோ நெல்லினை 20 ரூபாவுக்கும் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கவலை கூறுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இரண்டு தடவைகள் பாரிய வெள்ளம் ஏற்பட்டன. இதனால், நெற் செய்கையில் பாரியளவு சேதம் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சுமார் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற் செய்கை இடம்பெற்றது. இதில் முதல் தடவையாக இடம்பெற்ற வெள்ளத்தில் சுமார் 5200 ஹெக்டயர் காணிகள் பாதிப்புக்குள்ளாகின. இருந்த போதும் இவற்றில் பெருமளவான நெற்பயிர்கள் பாதிப்பிலிருந்து மீண்டதாக அம்பாறை மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது தடவையாக, ஏற்பட்ட வெள்ளத்தின் போது நெற்பயிர்கள் குடலைப் பருவத்தில் காணப்பட்டதால் பாதிப்பின் தன்மை அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட நெற்பயிர்களில் 5 வீதமானவை அழிவடைந்ததாக அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, நெல் அறுவடை பாதிப்படைந்துள்ளதோடு, அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.                                                        

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X