2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீதி பெயர்பலகையிலுள்ள அமைச்சரின் நிழற்படங்கள் மைபூசி அழிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அமைச்சர் அதாவுல்லாவினால் கல்முனையில் 26ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட வீதிகளின் பெயர் பலகையிலுள்ள தேசிய காங்கிரஸின் தலைவர் உள்ளிட்டவர்களின் நிழற் படங்கள், இனந்தெரியாத நபர்களினால் கறுப்பு மைபூசி அழிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (28) அதிகாலை இச்சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 'மஹிந்த சிந்தனை' எதிர்கால நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்முனைப் ஸாகிறா கல்லூரி வீதி, கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளி வீதி, கடற்கரைப் பள்ளி வீதி, கடற்கரை வீதி ஆகிய நான்கு வீதிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் அமைச்சினால் 20 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட நான்கு வீதிகளுக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் பெயர் பலகைகளும் நினைவுக் கற்களும் இவ்வீதிகளின் நுழைவாயிலில் நிறுவப்பட்டன.

இந்நிலையில், கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையிலுள்ள தேசிய காங்கிரஸின் தலைவர், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின் நிழற்படங்களுக்கு கறுப்பு மை பூசப்பட்டு முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இப்பெயர் பலகையில் இடமிருந்து வலமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.அமீர், ஏ.எம். ஜெமீல், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மற்றும் கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரின் நிழற்படங்கள் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியினரின் படங்களுக்கு கறுப்பு மை பூசப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பெயர் பலகையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் நிழற்படங்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .