2021 மார்ச் 08, திங்கட்கிழமை

த.தே.கூட்டமைப்பை விசாரிக்க வேண்டும்: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

ஜெனீவா விசாரணை இடம்பெற வேண்டுமாயின், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அவர்களே இந்த நாட்டில் இடம்பெற்ற கொலைகளுக்கு காரணமானவர்கள் எனவும் அவர் கூறினார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட திட்டமிடல் பிரிவு திறப்பு விழாவும் வைத்தியசாலை கீதம் வெளியீட்டு விழாவும் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் திங்கட்கிழமை (31) நடைபெற்றன. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஒட்டுமொத்தமான தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும்போதுதான் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன விடயங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் தமிழ் மக்களிடத்தில் அரசாங்கத்துக்கு   இருக்கும் ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல்களில் அரசாங்கத்துக்கு  கணிசமான வாக்குகளை வழங்குவதன் மூலமே இதனை நிரூபித்துக் காட்ட முடியும்.

முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கான  ஆதரவை எவ்வாறு வழங்குகின்றார்களோ, அதேபோல் தமிழ் மக்களும் வழங்கும்போது மட்டுமே நாம் பூரணமான அபிவிருத்தியையும் எமது தேவைகளையும் நிறைவு செய்துகொள்ள முடியும்' என்றார்.

மேலும்,  இவ்வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவும் கட்டிடம், தொழில்நுட்பம், ஊழியர் குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு பெறப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.

இந்நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட தாதியர் சங்கத் தலைவர் எஸ்.சசிகரன், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுத் தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி,  கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் ஸ்ரீபன் மத்தியூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .