2021 மே 06, வியாழக்கிழமை

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடல் குழு தெரிவு

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திட்டமிடல் குழுவொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இக்குழு தெரிவு செய்யப்பட்டது.

சாய்ந்தமருது அபிவிருத்திக்கான திட்டமிடல் குழுவின் தலைவராக பொறியியலாளர் எம்.ஐ.எம்.ஜெசீல், செயலாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றஸ்மி ஆகியோர் தெரிவாகினர்.

புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மூலம் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன் இத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்படி திட்டமிடல் குழு பக்கபலமாக செயற்பட வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரினால் வலியுறுத்தப்பட்டது.

சாய்ந்தமருதில் நீண்ட காலப் பிரச்சினையாக இருந்து வருகின்ற தோனா, தாமரைக் குளம் ஆகியவற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதுடன் வடிகாலமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பிலான வேலைத் திட்டத்தை முன்னெடுத்தல், நிலப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு வயல் பகுதியில் குடியிருப்புக்கான காணிகளை நிரப்புதல், சாய்ந்தமருது வயல் பகுதியை ஊடறுத்து சம்மாந்துறை- கல்முனையை இணைக்கும் வகையில் புதிய நெடுஞ்சாலையை அமைத்தல், பொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்ப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்றவற்றை 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் உள்ளடக்கி அவற்றை ஆரம்பித்து வைக்க வேண்டிய தேவை இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தனது அமைச்சின் மூலம் இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தானும் அமைச்சு அதிகாரிகளும் தயாராக இருப்பதாகவும் அதற்கு ஜெமீலின் வழிகாட்டலுடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள திட்டமிடல் குழு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாயின் அவற்றை நாம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

சில விடயங்கள் கல்முனை தொகுதிக்கான புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா உட்பட இப்பிரதேசத்தை சேர்ந்த துறைசார் நிபுணர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல், வடிகாலமைப்பு  அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .