2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கொங்கோவில் படையினர் 26 பேரைக் கொன்றனர்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டம் செய்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தேர்தலை நடத்தாமல், தொடர்ந்தும் பதவியில் இருப்பதைத் தொடர்ந்தே, ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

தனது இரண்டாவது பதவிக் காலத்தை, 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 20ஆம் திகதி ஆரம்பித்த ஜனாதிபதி ஜோசெப் கபில, இவ்வாண்டுடன் தனது பதவியை நிறைவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அவர், மீண்டும் தேர்தல்களில் பங்குபற்ற முடியாது.

ஆனால், நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறவிருந்த தேர்தல், 2018ஆம் ஆண்டின் ஆரம்பம்வரை இடம்பெறாது என, தேர்தல்கள் அதிகாரசபை, செப்டெம்பரில் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களின் எண்ணிக்கை, முழுமையாகத் தெரியாததன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவ்வதிகாரசபை அறிவித்தது. ஆனால், அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்காகவே, இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையிலேயே, உடனடியாகத் தேர்தல் நடைபெற வேண்டும், தனது பதவியிலிருந்து ஜனாதிபதி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாச்சிச்சூடு நடத்திய பாதுகாப்புப் படையினர், 26 பேரைக் கொன்றுள்ளனர்.
இதே காரணத்துக்காக, செப்டெம்பரில் ஆர்ப்பாட்டம் நடத்திய 17 பேர் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .