2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

டிட்வாவில் உயிரிழந்தவர்களும் தியாகிகளே: திலகர்

Editorial   / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிட்வா சூறாவளியுடனான மண்சரிவுகளில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையகத் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வுகள்  நுவரெலியா நகர மத்தியில் அமைந்த மலையத் தியாகிகள் நினைவு தூபி  முன்றலில் மலையகத் தியாகிகள் தினமான ஜனவரி 10 ஆம் திகதி காலை நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின்  முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச அரசியல், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

தலைமை உரையாற்றிய இராஜாராம்  

மலையக தியாகிகள் நினைவாக நுவரெலியா நகரில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபி எமது முயற்சியால் இந்த இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நாட்டுக்காக உழைத்த மக்களுக்கு நன்றிக் கடனாக இலங்கை அரசே இத்தகைய நினைவுத்தூபியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் அரசால், அரசாங்கங்களால் பாராமுகமாக நடாத்தப்படும் மக்களாகவே இருநூறு வருடங்களாக வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தியாகிகளின் நினைவேந்தல் நாட்டுக்கும் உலகுக்கும் மலையக மக்கள் என்போர் யார்? அவர்களின் உழைப்பின் பெறுமதி என்ன எத்தகைய பங்களிப்புகளை நாட்டுக்காக செய்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது என தெரிவித்தார் . 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற    உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா, மலையகத்தில் டிட்வா புயலனர்த்த மண்சரிவுகளால் உயிரிழந்தவர்களும் தியாகிகளே என்றார்.

பத்துச்சத சம்பள உயர்வுக்காக போராடி உயிர்நீத்த தோட்டத் தொழிலாளியும் முதல் தியாகியுமான  முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த ஜனவரி 10 ஆம் திகதியன்று  இதுவரை மலையகப் போராட்டத் தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கின்றோம். சம்பள உயர்வுக்காக மட்டுமன்றி தொழிற்சங்க உரிமை, காணி உரிமை போராட்டங்களில் உயிர்நீத்தவர்களும்  இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர். 

அண்மையில் இடம்பெற்ற டிட்வா சூறாவளியுடனான மண்ணில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள்தான். ஏனெனில் இவர்களது மரணம் இயற்கையானது அல்ல. இவர்களது வாழ்விடங்களை இவர்கள் தெரிவு செய்யவில்லை. அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்காக அவர்களது உயிர்களின் மதிப்பைக் கருதாது  பாதுகாப்பற்ற வாழ்விடங்களில் வாழவைக்கப்பட்டதே இவர்களின் மரணத்துக்குக் காரணமாகும்.இந்த அனர்த்ததினால்   இலங்கையில் நடந்த மரணங்களில் 25% வை மலையகத் தோட்டப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன என்பது கவனத்துக்குரியது. இவர்களின் இந்த மரணமும் அதனைத் தொடர்ந்த மக்கள் எழுச்சியும் என்றுமில்லாத வகையில் மலையகத்தில் நிலத்துக்கும் நியாவாகத்துக்குமான உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்த 127 உயிர்களின் தியாகம் இந்த எழுச்சிக்கு காரணமாகியுள்ளது என்ற அடிப்படையில் இவர்களையும் கூட மலையக தியாகிகளாக நினைவுகூர வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .