2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

குறுந்தூர ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 10 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டை கடலுக்குள் வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்குக் கரையிலிருந்தே மேற்படி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அவை 500 கிலோமீற்றர் வரையில் பயணித்து கடலினுள் வீழ்ந்ததாக தென்கொரிய இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏவுகணைகள் ஏவப்பட்ட சிறிது நேரத்தின் பின், கொரியாக்களுக்கிடையேயான அனைத்து கூட்டுறவு திட்டங்களையும் பயனற்றதாக்குவதாக தெரிவித்த வடகொரியா, வடகொரியாவில் உள்ள தென்கொரியாவின் சொத்துக்களையும் அழிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. வடகொரியாவிலுள்ள தென்கொரியாவின் சொத்துகளில் பெரும்பாலனவை, கேஸொங் கைத்தொழிற்துறை வலயத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்டதூர ஏவுகணை மூலம் செய்மதியை வடகொரியா ஏவியமையையடுத்து வடகொரியாவாலும் தென்கொரியாவாலும் இணைந்து நடாத்தப்படும் கேஸொங் கைத்தொழிற்துறை வலயத்திலிருந்து கடந்த மாதம் தென்கொரியா விலகியிருந்தது. அந்நேரம், கைத்தொழிற்துறை வலயம் மூடப்பட்டதை போருக்கான அறிவிப்பு எனத் தெரிவித்த வடகொரியா, கேஸொங்கானது இராணுவ வலயம் எனத் தெரிவித்திருந்தது.

இதேவேளை, பலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருந்தக்கூடிய அணுகுண்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன் கடந்த புதன்கிழமை (09) தெரிவித்திருந்தார். எனினும் இதை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு நிராகரித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .