2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சித்திரவதை: விசாரிக்குமாறு மியான்மாருக்கு கடும் அழுத்தங்கள்

Editorial   / 2017 மே 28 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைவிலங்கிடப்பட்டுத் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களை, மியான்மாரின் இராணுவ உடையணிந்தோர், கடுமையாகத் தாக்குவதாகக் காட்டும் காணொளி தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, மனித உரிமைகள் குழுக்கள், இன்று (28) கோரிக்கை விடுத்தன.

பேஸ்புக்கில் நேற்று வெளியான இந்தக் காணொளி, மிகப் பிரபலமாக மாறியிருந்தது.
அந்தக் காணொளியில், இராணுவ உடையணிந்த பலர், பொதுமக்களைப் போன்று உடையணிந்து, கைவிலங்கிடப்பட்டிருந்த மூவரைத் தாக்குவது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 17 நிமிடங்கள் நீண்ட அந்தக் காணொளியில், இராணுவ உடையணிந்தவர், தனது தலைக்கவசத்தை, தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரொருவரின் முகத்தில் அறைவதுவும் காண்பிக்கப்படுகிறது.

அத்தோடு, தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம், டாங் தேசிய விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களா அவர்கள் என, இராணுவச் சீருடை அணிந்தவர்கள் கேட்பதும், காணொளியில் பதிவாகியுள்ளது. குறித்த தேசிய விடுதலை இராணுவம், நாட்டின் இராணுவத்துக்கெதிராகப் போரிடும் ஆயுதக்குழுவாகும்.

இந்நிலையிலேயே, இந்தக் காணொளி தொடர்பாக, மியான்மார் அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டுமென, ஃபோர்ட்டிபை உரிமைகள் என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, இவ்வாறான சித்திரவதைகள், வழக்கமாகியுள்ளதாகத் தெரிவித்த மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவ்வாறான நிலைமைகளே, மியான்மார் இராணுவம் மீது, ஆயுதக் குழுக்கள், நம்பிக்கை வைப்பதைத் தடுக்கின்றன என தெரிவித்தது.

அத்தோடு, நொபெல் பரிசு பெற்றவரும் நாட்டின் சான்செலருமான ஆங் சாங் சூகி, இந்தத் துஷ்பிரயோகங்களை, பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டுமெனவும் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அக்கண்காணிப்புக் குழு தெரிவித்தது.

ஆங் சாங் சூகி, இராணுவத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இதுவரையில் எடுக்கவில்லையென்பதோடு, இராணுவத்தை நியாயப்படுத்தியே வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .