2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ட்ரோனை திருப்பிக் கொடுக்கிறது சீனா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்சீனக் கடலின் சர்வதேச நீர்ப்பரப்புக்குள் வைத்து, கடந்த வியாழக்கிழமையன்று கைப்பற்றிய ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கி ட்ரோனை, திரும்ப வழங்கவுள்ளதாக, சீனா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையில், இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்தே, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புமே மாறி மாறி, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், ட்ரோனைத் திருப்பி வழங்கவுள்ளதாக சீனா அறிவித்தது.

இந்த முடிவு தொடர்பாக டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த ட்ரோனை, சீனாவே வைத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். இது, சீனா மீதான அவரது அண்மைக்கால விமர்சனங்களின் நீட்சியாக அமைந்தது.

இந்தக் கருத்தை வெளிப்படுத்த முன்னர் ட்ரம்ப் பதிந்த டுவீட்டே, அதிக கவனத்தை ஈர்த்தது. "ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை ஆராய்ச்சி ட்ரோனை, சர்வதேச நீர்ப்பரப்புக்குள் வைத்து, சீனா களவெடுத்துள்ளது" என்று தெரிவித்த ட்ரம்ப், நீரிலிருந்து அந்த ட்ரோனை எடுத்துச் சீனாவுக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதோடு, இதுவரை நடந்திருக்காத வகையில் (unprecedented) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமானது அன்று அல்லது ஜனாதிபதிப் பதவிக்குரியது அன்று எனப் பொருள் வழங்கக்கூடிய, ஆனால் இதுவரையில் அகராதிகளில் இல்லாத, தவறான சொல்லான unpresidented என்பதைப் பயன்படுத்தினார்.

இதையடுத்து, அவர் மீதான கேலிகள், டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலையமைப்புகள் முழுவதிலும் பரவின. அவரது அந்த டுவீட், சுமார் 80 நிமிடங்களின் பின்னரே அழிக்கப்பட்டு, சரியான எழுத்துக் கூட்டலுடன் கூடிய டுவீட் பதியப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--