2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடவிருந்தேன்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு நவம்பர் 13ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், உயிருடன் காணப்படும் பிரதான சந்தேகநபரான சாலா அப்டெல்சலாம், விளையாட்டரங்கை தற்கொலைத் தாக்குதல் மூலம் தாக்கவிருந்ததாகவும், ஆனால் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பரிஸ் தாக்குதலின் முக்கிய சந்தேகநபரான இவர், தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்குச் சென்றிருந்தார். அங்கு, நான்கு மாதங்களாகத் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், பிரசெல்ஸில் வைத்து, காலில் சுடப்பட்டு, அவர் பிடிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்திலேயே, இவ்விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
'ஸ்டேட் டி பிரான்ஸ் அரங்கில் தன்னை வெடிக்க வைக்க நினைத்தார், ஆனால் பின்வாங்கிக் கொண்டார்" என, பிரான்ஸின் புலனாய்வாளரான பிராங்கொஸ் மொலின்ஸ் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தை அவர், நீதவான் நீதிமன்றமொன்றில் வழங்கியதோடு, அதனைத் தொடர்ந்து பாதுகாப்பான சிறைச்சாலையொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அப்டெல்சலாமின் வழக்கறிஞர், குறித்த தாக்குதல் இடம்பெற்றபோது அப்டெல்சலாம், பிரான்ஸில் இருந்ததை ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும், எனினும் மேலதிக தகவல்களை அவர் வழங்கியிருக்கவில்லை எனவும் தெரிவித்தார். அத்தோடு, பெல்ஜியத்தைச் சேர்ந்த தனது கட்சிக்காரரை பிரான்ஸூக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பை வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

அப்டெல்சலாத்தையும் கைது செய்யப்பட்ட இன்னொருவரையும், பயங்கரவாதக் கொலையில் பங்கெடுத்தமை என்ற குற்றச்சாட்டின் கீழ், பெல்ஜியத்தைச் சேர்ந்த வழக்குத்தொடருநர்கள், குற்றஞ்சாட்டியுள்ளனர். அவரது சகோதரரொருவரான பிராஹமிம், குறித்த தாக்குதல்களில் பங்கெடுத்த தற்கொலைத் தாக்குதலாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .