Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 16 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியில் காணப்படும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் முயன்றுள்ளனர். இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவித்துள்ள போதிலும், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் குண்டுவெடிப்புகள் தொடர்ந்தும் கேட்டுவருவதாக, அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பிரதான இடங்களைச் சுற்றிவளைத்த இராணுவத்தினரில் ஒரு பிரிவினர், தலைநகர் அங்காராவிலும் பெரிய நகரமான இஸ்தான்புல்லிலும் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அத்தோடு ஹெலிகொப்டர்கள், விமானங்கள் ஆகியவற்றையும் கொண்டு, தாக்கினர்.
நாட்டின் அரச தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடக நிறுவனங்களைக் கைப்பற்றிய குறித்த பிரிவினர், நாட்டில் ஜனநாயக ஒழுங்கை மீளக் கொண்டு வருவதற்காக, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.
அத்தோடு, நாடாளுமன்றத்துக்குள் வைத்துக் குண்டுவெடிப்புச் சத்தங்களை அவதானிக்க முடிந்தது. அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், பொலிஸார் சிலர் காயமடைந்தமையையும், அரச ஊடகம் உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, நாட்டின் கரையோரப் பிரதேசத்தில் தனது விடுமுறையைக் களித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி தய்யிப் எர்டோவான், இந்தச் சூழ்ச்சிக்கெதிராக வீதிகளில் இறங்கிப் போராடுமாறு மக்களை அழைத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள், வீதிகளில் இறங்கிப் போராடியதோடு, புரட்சியில் ஈடுபட்ட பிரிவினருடன் தர்க்கங்களிலும் ஈடுபட்டனர்.
மறுபக்கத்தில், பிரதமர் பினாலி யில்டிரிம், புரட்சிக்காரர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு, இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் அறிவித்தாலும், அவர் அறிவித்துச் சில நிமிடங்களிலேயே, குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
ஜனாதிபதி எர்டோவான், அவசரமாக இஸ்தான்புல் விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்குள்ள ஆதரவாளர்களோடு இணைந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஆனால், அவர் அவ்வாறு வந்திறங்கிய உடனேயே, அந்த விமான நிலையத்தைக் கைப்பற்றிய இராணுவத்தினர், சிறிது நேரத்துக்கு அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். எனினும், சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி, அரசாங்கத்துக்கு விசுவாசமான இராணுவத்தினரால், அந்த விமான நிலையம், மீளவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, புரட்சியில் ஈடுபட முயன்ற இராணுவத்தினரில் சுமார் 30 பேரளவில், தங்களது ஆயுதங்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துச் சரணடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதோடு, இந்தப் புரட்சி தொடர்பாகக் குறைந்தது 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025