2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் பஸ் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள பிரதான நகரமான பெஷாவரில், பஸ்ஸொன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். மேலதிகமாக 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு, பெஷாவரிலுள்ள நெரிசல் மிக்க நகரான சட்டாரில் இடம்பெற்றதோடு, அலுவலகங்களுக்குச் செல்வதற்காக அரச ஊழியர்களை ஏற்றிக் கொண்டிருந்த பஸ்ஸிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த குண்டு, சுமார் 4 கிலோகிராம் எடையுள்ளது எனவும் பஸ்ஸின் எரிபொருள் தாங்கிக்கு அண்மையில் பொருத்தப்பட்டு, தூரத்திலிருந்து இயக்கப்படும் கருவியும் பொருத்தப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தார். எரிபொருள் தாங்கிக்கு அண்மையில் பொருத்தப்பட்டிருந்ததன் காரணமாக, வெடிப்பின் தாக்கம் இன்னும் அதிகமாக ஏற்பட்டது.

குறித்த குண்டு வெடித்ததும், தனக்கு ஏற்பட்டிருந்த காயங்களையும் பொருட்படுத்தாத பஸ் ஓட்டுநர், பொலிஸ் நிலையத்தை நோக்கி பஸ்ஸை ஓட்டிச் சென்றதாகவும், அதன் மூலம் மீட்பு நடவடிக்கைகள் இலகுவாக முன்னெடுக்கப்படக்கூடியதாக அமைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகன ஓட்டுநர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், இதில் இழக்கப்பட்ட உயிர்கள் தொடர்பாகத் தனது கவலையை வெளியிட்டுள்ளார். அத்தோடு, இவ்வாறான தாக்குதல்களைக் கோழைத்தனமான தாக்குதல்கள் என அழைத்த அவர், இவற்றின் மூலம், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் தமது கொள்கையிலிருந்து தம்மை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .