2025 ஜூலை 09, புதன்கிழமை

பேர்லின் ட்ரக் தாக்குதல்: சந்தேகநபரைத் தேடும் பணி தீவிரம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ட்ரக் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட துனீஷிய அகதி, ஆபத்தான இஸ்லாமிய ஆயுததாரியாக ஏற்கெனவே அடையாளங் காணப்பட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகியமையைத் தொடர்ந்து, ஜேர்மனிய அதிகாரிகள் இன்று (22), நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேற்கூறப்பட்ட சந்தேகநபரான 24 வயதான அனிஸ் அம்ரிக்கு, ஐரோப்பா ரீதியாக தேடப்படும் அறிவித்தலை விடுத்துள்ள ஜேர்மனியின் அரச வழக்குத் தொடருநர்கள், அவரின் கைதினை இட்டுச் செல்லும் தகவல்களை வழங்குவோருக்கு 100,000 யூரோக்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். இதேவேளை, அவர் பயங்கரமானவராகவும், ஆயுதம் தரித்தவராகவும் இருக்கலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தீவிரமான இஸ்லாமியவாதத்துடன் தொடர்புடையவை என்று கூறப்படும், அம்ரியினுடையவை என நம்பப்படும் அகதி அலுவலக ஆவணங்கள், கிறிஸ்மஸ் சந்தையிலிருந்த சனத்திரளின் மீது மோதி 11 பேரைக் கொன்ற ட்ரக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.

சில மாதங்களுக்கு முன்னர் அம்ரி தங்கியிருந்த, மேற்கு ஜேர்மனியின் எம்மெரிச்சிலுள்ள அகதி நிலையமொன்றில், நேற்று பொலிஸார் தேடியிருந்ததுடன், பேர்லினிலுள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தேடியிருந்தனர்.

இந்நிலையில், ஐரோப்பா ரீதியாக அம்ரியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளபோதும், சில பாதுகாப்பு முகவரகங்களின் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எவ்வாறு கைது செய்யப்படுவதிலிருந்தும், நாடு கடத்தப்படுவதிலிருந்தும் அம்ரியால் தவிர்க்க முடிந்தது என கேள்விகள் எழுந்துள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவால் உரிமை கோரப்பட்ட மேற்படி தாக்குதலில் காயமடைந்தவர்களில் 24 பேர் இன்னும் வைத்தியசாலையில் உள்ளதுடன், அவர்களில் 14 பேர் மோசமான காயங்களுடன் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாக்குதலொன்றை நடத்துவதற்காக, தானியங்கி ஆயுதங்களை வாங்குவதற்கு பணத்தைச் சேகரிக்கும் பொருட்டு கொள்ளையொன்றை அம்ரி திட்டமிட்டதாகச் சந்தேகத்துள்ளாகியிருந்ததாகவும் அரச வழக்குத் தொடருநர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை அம்ரி கண்காணிக்கப்பட்டபோதும், ஆதாரமெதுவையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதாலும், சிறிய போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர் என மட்டுமே அறிந்ததால், அவர் மீதான கண்காணிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு துனீஷிய எழுச்சியின் பின்னர் துனீஷியாவை விட்டு வெளியேறிய அம்ரி, இத்தாலியில் மூன்றாண்டுகள் வசித்ததாக துனீஷிய பாதுகாப்பு மூலமொன்று தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம், ஜேர்மனிக்கு வருகை தந்தபோதும் அவரது அகதிக் கோரிக்கை, இவ்வாண்டு ஜூன் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .