2021 மே 08, சனிக்கிழமை

முஸ்லிம் படைவீரரின் தந்தையின் 'உரையை எழுதியது ஹிலாரியின் ஆட்களா?'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த, முஸ்லிம் படைவீரரொருவரின் தந்தையின் உரையை எழுதியது, உண்மையிலேயே அவரா அல்லது ஹிலாரி கிளின்டனின் ஊழியர்களா என ட்ரம்ப் கேள்வியெழுப்பியுள்ளார்.

முஸ்லிம்கள் உட்படச் சிறுபான்மையினரை இலக்குவைத்துத் தனது பிரசாரங்களை மேற்கொண்டு வருவதோடு, அமெரிக்காவின் காணப்படும் ஆயுததாரிகளின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, நாட்டுக்குள் வருவதற்கு முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய, ஈராக்கில் உயிரிழந்த முஸ்லிம் படைவீரரொருவரின் தந்தை, ட்ரம்ப்பின் கொள்கைகளை விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் அரசியலமைப்பை ட்ரம்ப் வாசித்திருக்கிறாரா என்று கேள்வியெழுப்பிய அவர், வேண்டுமானால் தனது பிரதியை ட்ரம்ப்புக்குக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், "ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காக உயிரிழந்த வீரரமான தேசப்பற்றாளர்களின் கல்லறைகளைப் பாருங்கள். எல்லா மதத்தவரையும் பாலினத்தவரையும் இனத்தவரையும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் (டொனால்ட் ட்ரம்ப்) எதையும் தியாகம் செய்யவில்லை, யாரையும் தியாகம் செய்யளவில்லை" என்று அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த உரை, ட்ரம்ப்புக்குப் பலத்த அடியாக அமைந்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், ஏராளமான தியாகங்களைத் தான் செய்திருப்பதாக எண்ணுவதாகத் தெரிவித்துள்ளார். "நான் மிக மிகக் கடினப்பட்டு உழைப்பவன். பல ஆயிரணக்கணக்கான தொழில்களை உருவாக்கியுள்ளேன். மிகச் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளேன். மிக அற்புதமான வெற்றிகளைக் கண்டுள்ளேன். நான் ஏராளமாகச் செய்துள்ளேன் என நினைக்கிறேன்" என ட்ரம்ப் தெரிவித்தார்.

பின்னர், அந்த உரை நோக்கிக் கவனத்தைச் செலுத்திய ட்ரம்ப், "அதை யார் எழுதினார்கள்? ஹிலாரி கிளின்டனின் உரை எழுதுநர்கள் அதை எழுதினார்களா? அவரது மனைவியைப் பார்த்தீர்களால், அவர் அப்படியே நின்றார். சொல்வதற்கு அவரிடம் எதுவும் இருக்கவில்லை" எனத் தெரிவித்தார். குறித்த உரையை, தானும் தனது மனைவியும் இணைந்தே எழுதியதாக, அத்தந்தை முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X