2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விமானத் தாக்குதலில் அல்-ஷிஷானி கொல்லப்பட்டார் என்கிறது ஐ.எஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் உயர் தளபதிகளில் ஒருவரான ஒமர் அல்-ஷிஷானி, ஈராக்கில் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் தொடர்புபட்ட அமாக் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மொசூலில் இராணுவ நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்தபோது ஷர்கட் நகரத்தில் ஷிஷானி கொல்லப்பட்டதாக இராணுவ மூலமொன்றை மேற்கோள்காட்டி புதன்கிழமை (13) தெரிவித்துள்ள மேற்குறித்த இணையத்தளம், எப்போது அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்திருக்கவில்லை.

ஷிஷானியை அமெரிக்கப் படைகள் கொன்றதாக கடந்த மார்ச் மாதம் பென்டகன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஷிஷானி, தர்க்ஹான் பற்றிறஷ்வில்லி எனும் நிஜப் பெயரைக் கொண்டிருப்பதுடன் ஒமர் த சேச்சான் எனவும் அழைக்கப்படுகிறார். ஷிஷானி ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் எந்த தரத்தில் இருந்தார் என்று தெளிவில்லாத போதும், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் நெருங்கிய இராணுவ ஆலோசகர் எனவும் போர் அமைச்சர், பாதுகாப்புச் செயலாளருக்கு இணையான பதவியை வகித்தார் எனக் கூறப்படுகிறது.

ஷிஷானி பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு ஐந்து மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரை வழங்குவதாக அமெரிக்கா கடந்த வருடம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செச்சினிய போராளியாக, ரஷ்யப் படைகளுக்கெதிராக போர் புரிந்த ஷிஷானி, 2006ஆம் ஆண்டில் ஜோர்ஜிய இராணுவத்தில் இணைந்து, 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியாவில் ரஷ்யப் படைகளுடன் போரிட்டிருந்து, பின்னர், வெளிநாட்டு போராளிகள் குழுவொன்றின் தளபதியாக வட் சிரியாவுக்கு தனது தளத்தை நகர்த்தி, பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் சிரேஷ்ட தலைவராகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .